ஆசையே துன்பத்துக்கு காரணம் என்றார் கௌதம புத்தர்.ஆனால் நாம் நமக்கு தேவையானவற்றின் மீது அளவோடு ஆசை கொள்ளவேண்டும்.அதிகமான ஆசை நமது நற்பண்புகளை சிலநேரங்களில் அளவுக்கு அதிகமான ஆசை மழுங்கடித்துவிடும்
இந்த உலகில் பிறந்த உயிரினங்களில் சிறு பூச்சி முதல் மனிதன் வரை ஆசைக்கு அடிபணியாத உயிரினங்களே இல்லை என கூறலாம். அவ்வாறு ஆசைக்கு அடிப்பட்ட நாம் ஏதாவது ஒரு வகையில் நமது வாழ்க்கையை தொலைக்கிறோம். இதில் விலங்கினங்கள் ஏதாவதொரு (தனது) புலன்களின் ஆசையினால் மட்டுமே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றன. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் ஐம்புலன்களாலும் வாழ்க்கையை தொலைக்கின்றான்.
உதாரணமாக, மீன் எதனால் அழிகிறது? தூண்டில் புழுவுக்கு ஆசைப்பட்டு வாயை திறந்து புழுவைச் சாப்பிடுகிறது. மரணம் மீனைச் சாப்பிடுகிறது.
வண்டு எதனால் அழிகிறது? நாசியன் நறுமணத்தால் பூவில் மயங்கிக்கிடக்கிறது. பூவோ கருவுற்று, காயாகும் நோக்கில் இதழ்கழை மூடி விடுகிறது. மூங்கிலைத் துளைக்கும் வலிய வண்டு, நாசியின் நறுமணச் சுவையில் மயங்கி மெல்லிய பூவைக் கூடத் துளைக்க முடியாமல் உள்ளேயே கிடந்து சாகிறது.
அசுணமா என்றொரு பறவை. நல்ல இசை என்றால் அதற்கு நாட்டம். வேடுவர்கள் புல்லாங்குழல் எடுத்து வாசிக்கும் போது, இசைக்கு மயங்கி அவர்கள் தலைக்கு மீது வட்டம் இடும். வேடுவர்கள் உடனே கீழே நெருப்பை மூட்டி, பறை என்ற தோல் கருவியை எடுத்து தாருமாறாகத் தட்டியவுடன் நெருப்பில் விழுந்து வேடுவர்க்கு உணவாகி விடுகிறது. காது அதன் அழிவிற்கு காரணம்.
விட்டில் பூச்சி ஏன் அழிகிறது? கண் தான் காரணம். நெருப்பை பார்த்ததும் அதன் அருகில் சென்று நெருப்பிலேயே விழுந்து இறந்து விடுகிறது. கண்ணால் அழிகிறது விட்டில் பூச்சி.
யானைக்கு அழிவு எதனாலே? யானையைய் பிடிப்பவர்கள் காட்டிலே பழக்கிய பெண் யானையை தொலைவில் நிறுத்துவார்கள். அதன் அருகில் பள்ளம் வெட்டி இலை தழைகளைப் போட்டு இலேசாக மூடி வைப்பார்கள். காட்டில் அலையும் ஆண் யானை, மெய் இன்பம் என்ற உடல் சுகம் கருதி பெண் யானையை நோக்கி வரும். வழியில் பள்ளத்தில் விழுந்து மனிதர்களிடம் மாட்டிக் கொள்ளும். பிறகு தன் வாழ்நாள் முழுவதும் மரம் இழுத்து மனிதன் இடும் பணிகளைச் செய்து துன்பம் அடையும். மெய் என்ற சரீர ஆசையே யானையின் அழிவுக்கு காரணம்.
கண்ணாலே விட்டிலும், காதாலே அசுணமா பறவையும், நாசியால் வண்டும், வாயால் மீனும், மெய்யாலே யானையும் அழிகிறது. ஆனால் மனிதனோ இந்த ஒவ்வொரு புலன்களாலும் அழிவைத் தேடுகிறான். இப்படி ஐம்புலன்களாலும் அழிவைத் தேடுவதற்கு மூலக்காரணம் ஆசை என்னும் மனதை அடக்காமையே. ஆசை இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் ஆசைக்குள் நாம் முழுமையாக சிக்கிக் கொண்டால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.
ஆசையைய் பற்றிய ஆசையைய் துறந்தோர் கூறும் அறிவுரைகள்:
புத்தர்… ஆசையே துன்பத்திற்கு காரணம்.
இராமகிருஷ்ணர்…நமக்குள் ஆசை இருக்கலாம். நாம் ஆசைக்குள் சிக்கிவிடக்கூடாது. ‘படகு தண்ணீருக்குள் இருந்தால் ஆபத்து இல்லை. படகுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால் ஆபத்து தவிர வேறு எதுவும் இல்லை.
ஆசையின் கொடுமை, அதை அடையும் வரை ஆர்வம் இருக்கும். அடைந்ததும் நிறைவு வராது.
ஆதலால் அளவான ஆசைகளோடு வாழ்ந்து சுகம் பெருவோம்.
No comments:
Post a Comment