Monday, December 21, 2009

குழந்தைகள்- நம் பிரதிபலிப்புக்கள்


அது கொஞ்சம் வித்தியாசமான பள்ளி. வெறும் புத்தகப் படிப்பிற்காக மட்டும் நடத்தப் படுவது அல்ல அந்தப் பள்ளி. பள்ளி நிர்வாகத்திற்கு இன்றைய வெறும் புத்தகப் படிப்பில் மட்டும் நம்பிக்கை இல்லை. பள்ளியில் நுழைந்தவுடன் வெறும் கட்டிடங்கள் உங்கள் கண்களுக்குத் தெரியாது. எங்கு பார்த்தாலும் வெறும் செடிகள், கொடிகள், மரங்கள், வண்ண வண்ண பூக்கள் பூத்துக்குலுங்கும் அழகை எங்கும் அங்கே நீங்கள் காணலாம்.

கட்டிடங்களுக்கு அவ்வளவான முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் அவை அந்தப் பள்ளியில் ஓரத்தில் கட்டப்பட்டிருக்கும். எங்கு பார்த்தாலும் பசுமை. விதவிதமான பச்சையம் நிறைந்த இயற்கைச் சூழல்.

இன்றைய அழுத்தம் நிறைந்த உலகில் பள்ளிக்குள் நுழைந்தவுடன் ஒருவிதமான அமைதியை உணர முடிகிறது என இந்தப் பள்ளி வளாகத்திற்கு வருகை தருபவர்கள் எல்லோருமே சொல்லக்கூடிய வார்த்தைகள். வீட்டில் ஆயிரம் உளைச்சல் இருந்தாலும், ஆயிரம் சச்சரவுகள் நடந்தாலும் இந்த பள்ளி வளாகத்தில் நுழைந்தவுடன் அந்த அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி ஏற்படுகிறது என அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் சொல்வார்கள்.

இப்படிப்பட்ட பள்ளியில் ஒரு நாள்....

அன்று காலை, மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும் என்று பள்ளி மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களும், ஆசிரியர்களும் பாரதியின் பாடலுடன் காலை வணக்கம் துவங்கி, பிறகு 15 நிமிடங்கள் உடல் சுறுசுறுப்புக்காக யோகா, மன நிம்மதிக்காக 15 நிமிடம் தியானம் போன்றவற்றை முடித்து எல்லோரும் தத்தம் வகுப்புகளுக்கு சென்றனர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவன் ஒரு நாள் சற்று சோகமாக இருந்தான். வழக்கமாக கலகலப்பாக பேசும் நண்பர்களிடம் இருந்து கூட சற்று ஒதுங்கியே இருந்தான். வகுப்பு ஆசிரியர் கவனித்து சற்று கவலை கொண்டார். அந்த ஆசிரியருக்கு எந்த மாணவராவது சோகமாக இருந்தாலோ, அழுதாலோ பொறுக்காது. இந்த மாணவரைப் பார்த்து ஏன் இப்படி இருக்கிறாய் எனக் கேட்டார். அந்த மாணவர் பதில் சொல்லவில்லை. மற்றமாணவர்கள் "காலையிலிருந்தே இப்படித்தான் இருக்கிறான், எங்களுக்கெல்லாம் கஷ்டமாக இருக்கிறது'' என அந்த ஆசிரியரிடம் சொல்லி வருத்தப்பட்டது கவலை கொள்ள வைத்தது.
வகுப்பு முடிந்ததும் அந்த மாணவரை தனியாக அழைத்து அந்த பள்ளியில் இதற்கெனவே இருக்கும் ஆஉ உயஉத ஏஅடடவ என்ற ஆலோசனை மையத்திற்கு அழைத்துச் சென்றார். சற்று நேரம் அந்த மாணவரை அமரச் செய்து ஒரு அமைதியான நேரத்தை அந்த மாணவருக்கு ஏற்படுத்தி தந்தார்.

அந்த மாணவனுக்கு அது மிகவும் இதமாக இருந்தது. உலகமே பெருத்த மகிழ்ச்சியோடு தன்னை நோக்கி ஓடி வருவதைப்போல உணர்ந்தான். சிறுவயதில் தாயின் மடியில் தூங்கும் போது கிடைக்கும் சுகத்தை அப்போது அந்த மாணவனின் மனம் அடைந்தது. ஆசிரியர் எந்த கேள்வியும் கேட்காமலே, மாணவன் பேச ஆரம்பித்தான்.

"எதற்கெடுத்தாலும் வீட்டில் சந்தேகப் படுகிறார்கள். எந்தப் பாட்டைக் கேட்டாலும் தப்பு கண்டுபிடிக்கிறார்கள். நின்றால் தப்பு, உட்கார்ந்தால் தப்பு. சில சமயங்களில் அப்பா, அம்மா கேட்கும் கேள்விகள் அருவருப்பாக இருக்கின்றன. எனக்கும் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்து சிறப்பாக எதிர்காலத்தில் வாழ வேண்டும் என்றஆசையெல்லாம் இருக்கிறது. போனில் பேசினால் யாரிடம் பேசுகிறாய் எனக்கேட்டு சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். தேர்வு சமயங்களில் இதனாலேயே சரிவர கவனம் செலுத்த முடிவதில்லை'' என அந்த மாணவர் சொல்லி வருத்தப்பட்டார்.

இது எல்லார் வீட்டிலும் இருக்கும் பொதுவான பிரச்னைகள் தான். பெற்றோர்களின் அதீதமான எதிர்பார்ப்பு. குழந்தைகளின் மேலோட்டமான பார்வை. பெற்றோர்கள் தங்களைப் புரிந்து கொள்ளவில்லையே என இன்றைக்குப் பல குழந்தைகள் நினைக்கின்றன.

இதில் கொஞ்சம் தான் உண்மை. குழந்தைகளுக்கு இதில் உண்மையான அர்த்தம் தெரியவில்லை. அவர்களுக்கு ஏதாவது ஒரு சிறிய சிரமம் வந்தால் கூட தன்னை யாரும் புரிந்துகொள்ள வில்லையே என நினைக்கிறார்கள். பெற்றோர்களிடம் கோபப் படுகிறார்கள். சரியாக சாப்பிடுவதில்லை.

இப்படி ஒரு இறுக்கமான சூழ்நிலை பல வீடுகளில் எப்படியோ உருவாகி விடுகிறது.

இதற்குக் காரணம் குழந்தைகள் மட்டுமா?
இல்லை.

பெற்றோர்களும் இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணமாக இருக்கிறார்கள்.

இவர்கள் நினைத்ததையெல்லாம் அவர்களது குழந்தைகளை செய்ய வேண்டும், நூல் பிடித்தாற்போல தொடர வேண்டும் என நினைக்கிறார்கள். ஒரு நண்பர் தான் விரும்பிய சினிமா பாடலைத்தான் தன் குழந்தைகள் தொலைக்காட்சியில் காணவேண்டும் என நினைக்கிறார். அவரது குழந்தை கேட்கும் பாடலில் ஏதாவது அசிங்கமான வார்த்தைகள் இருந்தால் (இருந்தால் என்ன, அதுதான் இருக்கிறது), கண்டபடி அவரது குழந்தைகளை திட்டுகிறார். கோபித்துக் கொள்கிறார். பலரிடமும் சொல்லி வருத்தப்படுகிறார்.

அதில் தவறில்லை. மிக அதிகமான அளவில் குழந்தைகளை திருத்த நினைக்கும்போது, அதுவே வேறு விதமாக போய் முடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

தயவு செய்து இதைப்போல விஷயத்தைப் பெரிதாக்க வேண்டாம். நீங்கள் பார்க்கும் கோணத்தில்தான் உங்கள் குழந்தைகளும் பார்க்கிறார்கள் என நீங்களாக விஷயத்தைக் கையில் எடுத்துக் காரியத்தை மோசமாக்க வேண்டாம்.

இன்னும் சிலர் தங்களது குழந்தைகளைப் பற்றி பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். தங்கள் குழந்தைகளையே எதற்கும் நம்ப மாட்டார்கள். இந்த மாதிரி விஷயத்தில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். சரியானபடி குழந்தைகளைப் புரிந்து கொண்டு நடக்கும் பெற்றோர்கள் மிக மிக குறைவாகவே காணப்படுகிறார்கள்.

அது இந்தியாவிலேயே சிறந்ததொரு Architecture College 3ம் வருட மாணவர்களுக்கு ஒரு தலை சிறந்த பேராசிரியர் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது, மாணவர்களிடம், "இன்றைக்கு காலையில் என் வீட்டிற்கு ஒரு தாயார் வந்து தன் மகனைப் பற்றி அழுது விட்டு போனார். அதாவது தன்னுடைய மகன் வீட்டிற்கு தாமதமாக வருகிறார். சரியாக சாப்பிடுவதில்லை. நாலு கேள்விகள் கேட்டால் ஒரு பதிலைத்தான் சொல்கிறார். அவர் போடும் உடைகளை கண்டாலே எரிச்சல் வருகிறது. நீங்கள் சொன்னால் நிச்சயம் கேட்பார். உங்கள்மேல் நல்ல மதிப்பு இருக்கிறது. அதனால் தான் உங்களிடம் வந்து சொல்கிறேன் என்று அந்த அம்மா சொன்னார்.''

இதை மாணவர்களிடம் சொல்லி விட்டு, இனிமேல் யாரும் இதைப்போல நடக்க வேண்டாம். பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் தங்கள் பிள்ளைகளைப் பற்றி எக்காரணம் கொண்டும் முறையிடக் கூடாது. முதலில் பெற்றோர்களிடம் நீங்கள் நம்பிக்கையும் மதிப்பும் வைத்து உங்கள் மீது உங்கள் பெற்றோர்கள் நம்பிக்கை வைக்கும் வண்ணம் உங்கள் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தினார் அந்த ஆசிரியர்.

இதில் கவனித்தீர்களானால், அந்த தாய் கூறிய "உங்களின்மேல் மதிப்பு'' என்ற வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இதுதான் முக்கியம். பிறர் நம் மேல் மதிப்பு வைத்திருக்கும் பட்சத்தில், அப்படி நாம் நடந்து கொள்ளும் பட்சத்தில், நமக்கும் மதிப்பு, நம் வார்த்தைகளுக்கும் மதிப்பு. அதேபோல வீட்டில் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் மிகவும் அவசியமான நம்பிக்கை. இவைதான் குடும்பத்தில் நிம்மதியைத் தருகின்றன. மாணவர்களின் வளமான வாழ்க்கைக்கு அடித்தளம் இடுகின்றன.

நம்முடைய குடும்பத்தை அன்பாகவும் அமைதியாகவும் வைத்துக் கொள்ளுவது முதலில் பெற்றோர்களிடம் இருக்கிறது. நாம் நம் பெற்றோர்களை மதித்தால், நாளை நம் குழந்தைகள் நம்மை மதிப்பார்கள். நல்ல கண்ணோட்டத்திலேயே எல்லாவற்றையும் காண்போம். நிச்சயம் நம் குழந்தைகளும் அதே போல வளருவார்கள்.

நம் பிரதிபலிப்புத்தான் நம் குழந்தைகள். அதே போல நல்ல புரிதல் கொண்ட பெற்றோர்கள் தான் பிள்ளைகளின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் ஏர்முனைகள்.

நன்றி :வடக்கு வாசல்

No comments:

Post a Comment