நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர்.
Wednesday, December 2, 2009
துறவியின் பெருந்தன்மை
அந்தக் கிராமத்தில் அனைவரையும் சொக்கவைக்கும் அழகுடன் வலம் வந்து கொண்டிருந்த ஒரு இளம்பெண் திடீரென்று கர்ப்பம் தரித்தாள். பெற்றோரும் உற்றோரும் அந்தக் குழந்தையின் தகப்பன் யார் என்று அந்தப் பெண்ணை அடித்துத் துன்புறுத்திக் கேட்டனர். கிராமத்தில் யார் வம்புக்கும் போகாது பெரும்பாலான நேரத்தைத் தியானத்தில் கழித்து வரும் ஜென் துறவி ஒருவரைக் கை காண்பித்தாள் அந்தப் பெண். மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு அந்த ஜென் துறவியிடம் சென்று அவரை அடித்து உதைத்துக் கேட்டார்கள். அவர் சிரித்துக் கொண்டே "அப்படியா?'' என்று கேட்டார். "என்ன திமிர் பாருங்கள் இவனுக்கு?'' என்று கடிந்து கொண்டு குழந்தை பிறந்ததும் அந்தத் துறவியின் கைகளில் ஒப்படைத்து "இந்தக் குழந்தைக்கு நீ தான் தகப்பன். இதனை வளர்ப்பது உன் பொறுப்பு'' என்று குழந்தையை அவருடைய கரங்களில் திணித்தனர். புன்னகை தவழும் முகத்துடன், "அப்படியா?'' என்று கேட்டுக் குழந்தையை வாங்கிக் கொண்டார். அந்தக் குழந்தையைத் தன் குடிசையில் அன்புடன் வளர்க்கலானர் துறவி. சில நாட்களுக்குப் பிறகு, குற்ற உணர்வு தாளாத அந்தப் பெண் அழுது கொண்டே, அந்தத் துறவி அப்பாவி என்றும் தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞன் தான் அக்குழந்தைக்குத் தகப்பன் என்றும் அந்தப் பையனைக் காப்பாற்றும் நோக்கத்துடன் தான் ஊருக்குப் பொய் சொன்னதாகவும் தெரிவித்தாள். ஊரே மீண்டும் திரண்டு போய் அத்துறவியின் குடிசை முன்பு நின்றது. எல்லோரும் அவரைப் பணிந்து மன்னிப்புக்கேட்டு நடந்ததை வருத்தத்துடன் அவருக்குத் தெரிவித்தார்கள். துறவி அதே புன்னகையுடன் அவர்களைக் கேட்டார்,
"அப்படியா?''
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment