நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர்.
Monday, December 7, 2009
மேடைக்குப் பின்புறம் வாடும் மலர்கள்...
நம்முடைய பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கான ஆண்டு விழாக்களை கொண்டாடுகின்றன.
ஒரு பள்ளிக்கு ஆண்டுவிழா என்பது முக்கியமானதுதான். இதில் எவ்விதமான சந்தேகமும் கிடையாது. பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் திறனை பெற்றோர் மற்றும் உற்றோர்களின் முன்வைப்பதற்குப் பள்ளி நிர்வாகம் அளிக்கும் ஒரு அரிய வாய்ப்பு. அதேபோல படிப்பில் கெட்டிக்காரர்களாக இருக்கும் மாணவர்களை மேடையில் அழைத்து சிறப்பித்தல் என்பது மற்ற மாணவர்களுக்கும் ஒரு ஊக்கம் தரும் விஷயமாக அமையும். ஆசிரியர்களும் தங்கள் கலைத் திறனையும் ஆர்வத்தையும் இந்த மாணவர்கள் வழியாக முன்வைக்கும் ஒரு நல்ல நிகழ்வுதான் இந்த ஆண்டுவிழாக்கள்.
ஆனால் இன்றைய சூழலில் இந்த ஆண்டு விழாக்களின் நோக்கங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வேறு திசைகளில் தன் பயணங்களை மாற்றிக் கொண்டது மனதுக்கு ஊக்கம் அளிப்பதாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நம்முடைய பள்ளிகள் பெரியது சிறியது என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல் ஒரு விஷயத்தை ஒன்றாக, சொல்லப்போனால் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு கடைப்பிடித்து வருகிறார்கள். அது என்னவென்றால், எது தவறினாலும் மிகவும் ஆடம்பரமாகத் தங்கள் ஆண்டுவிழாக்கள் கொண்டாடுவதில் எந்தப் பள்ளியும் தவறுவதில்லை.
ஏற்கனவே சொன்னது போல பள்ளி மாணவர்களின் கலைத்திறனை ஊக்கப்படுத்தவும், திறமையான மாணவர்களுக்குப் பரிசளிக்கவும் பள்ளியின் மேன்மையை நகருக்குள் பறைசாற்றிக் கொள்ளவும் இவை போன்ற விழாக்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் சில பள்ளிகளில் இந்த ஆண்டு விழாக்களின் போது கடைப் பிடிக்கப்படும் ஆடம்பர விளம்பரங்களும் வண்ணத் தோரணங்களும் விளக்குகளும் அந்தப் பகுதியையே அன்று ஸ்தம்பிக்க வைத்து விடும். அதுவும் அந்தப் பள்ளியின் விழாவுக்குத் தலைமையேற்க ஏதேனும் அமைச்சரோ அல்லது கட்சி சார்ந்த பெரிய தலைவர்களோ வந்தால் அந்தப் பகுதி மக்களின் நிலை திண்டாட்டம்தான். அலங்கார விளக்குகளும் ஆர்ப்பாட்டமான விளம்பரப் பலகைகளும் ஊரையே கலக்கிவிடும்.
ஒரு பள்ளி சில லட்சங்கள் செலவழித்து இந்த ஆண்டு விழாவினை நடத்தினால் இன்னொரு பள்ளி மேலும் பல லட்சங்கள் செலவழித்து அந்த ஊரையே அமர்க்களப்படுத்தி விடுவார்கள். கல்வித்தரம் அளிப்பதில் போட்டி இருக்குமோ இருக்காதோ இந்த ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் தமிழகத்தில் ஒரு பள்ளிக்கு இன்னொரு பள்ளி சளைத்தவர்கள் அல்ல என்னும் அளவில் இந்த விழாவைக் கொண்டாடுவார்கள் பள்ளி நிர்வாகத்தினர்.
சில பள்ளிகளின் தரம் இந்த ஆண்டுவிழா ஆடம்பரங்களை அளவுகோலாக வைத்து நடப்பதைப்போல நடந்து கொள்வார்கள்.
காலப்போக்கில் இது போன்ற ஆண்டு விழாக்கள் ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம் என்ற நிலை உருவாகிப் போனது. இதில் மனதுக்கு மிகவும் வேதனை தருவது இந்தப் பள்ளிகள் குழந்தைகளை வைத்து நடத்தும் கலை நிகழ்ச்சிகள் தான். பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஒப்பனைகள் செய்து மூன்றாம் தரமான திரைப்பட நடிகர்களின் நடிப்பில் வெளிவந்த நான்காம் தரமான ஆபாசப் பாடல்களுக்கு அந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஆபாச நடன அசைவுகள் மற்றும் உடல் அசைவுகளை அமைத்து அவர்களை ஆடவைத்து கலைச்சேவை செய்வார்கள் அந்தப் பள்ளியின் நிர்வாகமும் ஆசிரியர்களும். இதனை பெருமை பொங்கப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள் நம்முடைய பெற்றோர்கள்.
சில பள்ளிகளில் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு ஒப்பனை செய்து நிகழ்ச்சிக்காகத் தயார் நிலையில் வைத்திருப்பார்கள். அந்தக் கண்றாவியான ஒப்பனையின் காரணமாக அந்தக் குழந்தையால் எதுவும் சாப்பிட முடியாது. உதட்டுச் சாயத்தின் கருணையால் நீரும் அருந்த முடியாது. இக்குழந்தைகளின் நடனமோ நாடகமோ மேடையில் நடித்துக் காட்ட வாய்ப்பு வரும் வரை இக்குழந்தைகள் இப்படியே ஒரே இடத்தில் பல மணி நேரங்கள் இருக்கவேண்டும். அந்தப் பிஞ்சு மலர்கள் பல மணி நேரங்களுக்கு வாடிச்சோர்ந்து போயிருக்கும். மேடையில் போய் நிற்கும் அந்த ஒரே ஒரு நிமிடத்துக்காக அந்த மலர்கள் துவளத் தொடங்கி இருக்கும்.
இதுபோன்ற விழாக்களுக்கு அந்த ஊரில் இருக்கும் பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள் அல்லது செல்வாக்கு மிக்க அதிகாரிகளை அழைத்து குழந்தைகளுக்கும் அங்கு கூடியிருக்கும் பெற்றோர்களுக்கும் ஏதாவது சொல்லுங்கள் எனும் வகையில் பேசச் சொல்வார்கள் பள்ளி நிர்வாகத்தினர்.
உண்மையிலேயே அங்கு வந்திருக்கும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் மேடையேற்றத்தைக் காணவும் அக்குழந்தைகள் பரிசுகளும் விருதுகளும் பெறுவதைக் காணத்தான் வந்திருக்கிறார்கள் என்றும் தங்களுடைய பேச்சைக் கேட்பதற்காக அல்ல என்று தெரிந்தும் அந்தப் பிரபலங்கள் ஐந்து நிமிடத்தில் பேச வேண்டியதை ஐம்பது நிமிடங்களுக்கும் மேலாக இழுத்துப் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆளும் கட்சிப் பிரமுகராக இருந்தால் தங்கள் தலைவரைப் பற்றிப் பேசித் தன்னுடைய விசுவாசத்தை உறுதிப் படுத்திக் கொள்ளும் இடமாக அந்த மேடையை மாற்றிக் கொள்வார். அந்தப் பிரபலங்களின் ஜால்ராக்கள் அந்தப் பிரபலங்களைப் பற்றிப் பேசிப் பேசித் தீர்ப்பார்கள். ஒப்பனை செய்யப்பட்டுத் தங்கள் முறைக்காகக் காத்திருக்கும் அந்தப் பிஞ்சு மலர்கள் மேடையின் பின்புறம் வாடிக் கொண்டு இருக்கும்.
இது ஒருவகையில் குழந்தைகள் மேல் நடத்தும் ஒரு அராஜகம் அல்லாது வேறென்ன? பல பெற்றோர்கள், குழந்தைகள் இதைச் சொல்லி வருத்தப்பட்டதை இங்கு பதிவு செய்ய நான் கடமைப் பட்டிருக்கிறேன்.
நம் கலாச்சாரம் அழிந்து வருகிறதோ என எல்லோரும் அச்சப்பட்டு வரும் இந்த வேளையில், இந்த ஆண்டு விழாக்களை, பல பள்ளிகள் இன்று எப்படி கொண்டாடி வருகிறது என்பதை இங்கு வருத்தத்துடன் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
பள்ளி நிர்வாகம் இதைப்போன்ற விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்து செய்ய வேண்டிய காரியமல்லவா இது?
கல்வி நிறுவனங்களின் உண்மையான பங்கு என்ன? நம்முடைய பொறுப்பு என்ன? எதையெல்லாம் நாம் ஊக்குவிக்க வேண்டும், எந்த வயதில் நாம் குழந்தைகளை ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்ள வேண்டும், அவர்களின் மன நிலை கெடாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்.....
இப்படியெல்லாம் பள்ளி நிர்வாகிகளிடம் பொறுப்பு இருக்கும் தறுவாயில், இதைப்போன்ற விழாக்கள் என்ற பெயரில் குழந்தைகளையும் பருவம் மலர்ந்த குழந்தைகளையும் இப்படி ஆபாசமாக மேடையில் ஆட விடலாமா? இவை போன்ற நிகழ்ச்சிகளில் தங்கள் பிள்ளைகள் கலந்து கொள்ளக்கூடாது என்பதில் பெற்றோர்கள் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு நம்முடைய பண்பாட்டினைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும் வகையிலான அம்சங்களைப் போதிக்கவும் திறமையான மாணவ மாணவியரை இனம் கண்டு அவர்களை சிறப்பிக்கும் வகையிலும் பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் அமைய வேண்டும் என்பதை பெற்றோர்கள் பள்ளிகளுக்கு உறுதிபடச் சொல்ல வேண்டும். பள்ளிகளின் ஆடம்பரங்களுக்குப் பெற்றோர்களே துணை போகக் கூடாது.
எல்லாவற்றுக்கும் மேலாக கலைநிகழ்ச்சி என்னும் பெயரில் நம்முடைய பிஞ்சுக் குழந்தைகளின் மனங்களில் நஞ்சைக் கலக்க அனுமதிக்கக் கூடாது.
விழாக்கொண்டாட்டங்கள் என்ற பெயரில் நாம் மலர்க்கொத்துக்களான நம் குழந்தைகளுக்கு எந்த வகையிலும் இம்சை அளிக்கக் கூடாது.
இதற்குப் பெற்றோரும் ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகங்களும் இணைந்து செயல்படவேண்டும்.
நன்றி :வடக்கு வாசல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment