நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர்.
Wednesday, December 9, 2009
ஊழலின் ஊற்றுக்கண்!
உலக ஊழல் ஒழிப்பு தினம் என்று ஆண்டுக்கொரு முறை ஊழலுக்கு எதிரானவிழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது என்பதே அவமானகரமானவிஷயம். கொலை கொள்ளை ஒழிப்புதினம், விபசார ஒழிப்பு தினம், உண்மைபேசும் தினம் என்றெல்லாம்கூட ஏற்படுமோ என்று பயமாக இருக்கிறது.
ஊழல் என்பது உலகளாவிய விஷயமாகிவிட்டது என்பதால் அதை அன்றாடவாழ்க்கையின் அம்சமாகவே பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டு விட்டதாகத்தோன்றுகிறது. ராஜா ராணி காலத்திலிருந்து ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாகஇருந்தவர்கள் அதிகப்படியான சலுகைகளை அனுபவிப்பது என்பது புதிய விஷயமல்ல. அதேபோல, ஆட்சியாளர்களில் பலர் குடிமக்களின் நலனைப் பற்றியே கவலைப்படாமல் சகல சௌபாக்கியங்களுடன் ராஜபோகமாக ஊதாரி வாழ்க்கைவாழ்ந்த சரித்திரம் உலகளாவிய ஒன்று.
ஆட்சியையும் அதிகாரத்தையும் ஒரு சிலர் பரம்பரை பாத்தியதை கொண்டாடிவருவதையும், குடிமக்களின் நல்வாழ்வைப் பற்றிய சிந்தனையே இல்லாமல்ஆட்சியாளர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் செயல்பட்டு வருவதையும் பார்த்து மக்கள் கொதித்து எழுந்ததன் விளைவுதான் மன்னர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதும், மக்களாட்சி மலர்ந்ததும். நியாயமாகப் பார்த்தால்மக்களாட்சியில் லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், ஒரு சிலர் தனிச் சலுகைகள் பெறுவது போன்றவற்றுக்கே இடம் இருக்கலாகாது.
ஆட்சி முறை மாறியதே தவிர மன்னராட்சியின் தவறுகளும் குறைபாடுகளும்களையப்பட்டனவா என்று கேட்டால் உதட்டைப் பிதுக்க வேண்டி இருக்கிறது. பரம்பரை ஆட்சிக்குக்கூட மக்களாட்சியில் முற்றுப்புள்ளி வைக்க முடியாதநிலைமை. ஜார் மற்றும் பதினெட்டாம் லூயி மன்னர்களுக்குப் பதிலாக ஹிட்லர், முசோலினி, இடி அமின் என்று சர்வாதிகாரிகளும், மக்களைப் பற்றிய கவலையேஇல்லாமல் தங்களது மனம் போன போக்கில் நடந்த ஆட்சியாளர்களும் மக்களாட்சியிலும் தொடர்வதுதான் வேடிக்கை.
வளர்ச்சி அடைந்த நாடுகள், வளர்ச்சி அடையாத நாடுகள் என்கிற வேறுபாடேஇல்லாமல், மக்களாட்சி, சர்வாதிகார ஆட்சி, ராணுவ ஆட்சி என்றெல்லாம் வித்தியாசம் பாராமல் எங்கும் எல்லா இடத்தும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள்போல லஞ்சமும், ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும், தனிநபர் சலுகைகளும்பரந்து விரிந்திருப்பது மனித சமுதாயத்துக்கே களங்கமாகவும் அவமானமாகவும்தொடர்கிறது.
லஞ்ச ஊழலைப் பொறுத்தவரை ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இது படித்தவர்களின் தனிச்சொத்து என்பதுதான். கிராமங்களில் படிக்காதஏழை விவசாயியோ, தொழிலாளியோ லஞ்சம் வாங்கவும், ஊழல் செய்யவும்வாய்ப்பே இல்லாதவர்கள். அரசு அலுவலர்களானாலும், காவல்துறையினரானாலும் அவர்கள் படித்தவர்கள். அவர்கள்தான் லஞ்சம் வாங்குகிறார்கள். அப்பாவிஏழைகளும், படிப்பறிவில்லாதவர்களும், சாமானியர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் இந்தப் படித்த "கன'வான்களின் பேராசைக்குத் தீனி போட வேண்டிய நிர்பந்தம்.
பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் பதவி ஏற்றதும் ஊழலுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டு, கைது செய்யப்பட்ட 365 அரசு ஊழியர்களில் 300 பேருக்கும் அதிகமானவர்கள் கோடீஸ்வரர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளில், சுமார் 1000 அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இவர்களில் சிலர் சிறைத் தண்டனையும் அனுபவித்தவர்கள். ஆனாலும் இவர்களில் ஒன்றிரண்டு கணக்கர்களும், கடைநிலை ஊழியர்களும் தவிர யாரும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. வழக்குகள் தொடரப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றனவே தவிர தீர்ப்பு எழுதப்படவில்லை. இவர்களைப் பதவி நீக்கம் செய்ய மேலதிகாரிகள் தயாருமில்லை. பிகாரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே உள்ள நிலைமை இதுதான்.
ஐம்ப துகளில் உள்துறை அமைச்சராக இருந்த குல்ஜாரிலால் நந்தாவில்தொடங்கி எத்தனை எத்தனையோ பிரதமர்களும், உள்துறை அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் ஊழலுக்கு எதிராகப் போரை அறிவித்து விளம்பரம் தேடிக்கொண்டார்களே தவிர ஊழல் ஒழியவும் இல்லை. ஊழலுக்கு எதிரான வாய் சவடால் குறையவுமில்லை.
அரசி யல் தலைவர்களின் ஊழலைக்கூடப் புரிந்து கொள்ளலாம். தேர்தலுக்குச்செலவு செய்த பணத்தை லஞ்சம் வாங்கி ஈடுகட்டி, அடுத்த தேர்தல்களுக்கானபணத்தைச் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார்கள் என்று சமாதானம் சொல்ல முடியும். கொள்ளை அடித்துக் கொள்ளவும், லஞ்சம் வாங்கிக் கொள்ளவும் மக்கள்அவர்களுக்கு வாக்களித்து அனுமதி வழங்கி இருக்கிறார்கள் என்று மனதைத்தேற்றிக் கொள்ளலாம்.
ஆனால், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள், மக்களிடமே லஞ்சம் வாங்குவது எந்த விதத்தில் நியாயம்? வாங்கும் சம்பளம் தங்களதுதகுதிக்கும் திறமைக்கும் ஏற்றதாக இல்லையென்றால் ராஜிநாமா செய்துவிட்டுவேறு வேலை பார்த்துக் கொள்வதுதானே? மக்களாட்சியில் மக்களுக்காக உழைப்பதற்காக மக்களால் சம்பளம் கொடுத்து நியமிக்கப்பட்டிருக்கும் வேலைக்காரர்கள், மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற மக்களிடமே லஞ்சம் வாங்குவதுதடுக்கப்பட்டால் ஒழிய, லஞ்சமும் ஊழலும் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகத்தொடர்வதைத் தடுக்க முடியாது.
லஞ்சமும் ஊழலும் படித்தவன் செய்யும் தவறு. "இவனெல்லாம் படித்தால் என்ன, படிக்காமல் போனால் என்ன?' என்று கேட்கத் தோன்றுகிறதா? படிக்காவிட்டால்லஞ்சம் வாங்க முடியாதே...!
நன்றி :தினமணி தலையங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment