Thursday, December 17, 2009

மாணவர்களும் அரசு விடுமுறையும்


மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே எப்போதும் கொண்டாட்டம்தான், எப்போது விடுமுறை வரும் என மாணவர் சமுதாயம் காத்துக் கொண்டிருக்கும், இது ஏறக்குறைய எல்லா இடங்களிலும் நம் நாட்டில் காணக்கூடிய காட்சி. மாலை பள்ளி முடிந்ததும் வெளிச்செல்லும் மாணவர்களின் பேரானந்த நிலைக்கு ஒருபடி மேலான பரமானந்தத்தை விடுமுறை அறிவிப்புக்களின் போது பள்ளிப் பிள்ளைகள் கொண்டாடுகின்றனர்.

பொதுவாக நம் நாட்டு பள்ளிக் கூடங்களில் வருடத்திற்கு 220 நாட்களாவது பணி புரிய வேண்டும் என்ற ஒரு வரையறை இருக்கிறது. பல மெட்ரிக் தனியார் பள்ளிகள் 220 நாட்களை விட அதிக அளவில் வேலை நாட்களை வைத்திருக்கின்றன, ஆனால் சமீப காலத்தில் அரசுப் பள்ளிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் சிறப்பு விடுமுறை அளிக்கின்றது, பல நேரங்களில் இது அரசியல் காரணங்களை சார்ந்தும் அமைகிறது.

இந்த சிறப்பு விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படிப் பொழுதை கழிக்கிறார்கள் என்பது மிக மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்யது நம்முடைய கடமை.

பெரும்பாலான மாணவர்கள் இந்தச் சிறப்பு விடுமுறையில் வீட்டில் தங்குவதில்லை. வெளியே நண்பர்களுடன் இருப்பதையே விரும்புவார்கள், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த சந்திப்புகள் நல்லபடியாக இருந்தால் பரவாயில்லை, இதைப் போல நாட்களில் சினிமா கொட்டகைகள் நிரம்பி வழிகின்றன. பள்ளிகளில் விடுமுறை அறிவித்தால் நகரின் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடங்கள் பலவற்றிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றன.

முக்கிய பிரமுகர் பிறந்த நாள் அல்லது இறந்த நாள் போன்றவற்றை, கட்டாயம் நாம் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணி புரிபவர்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் பணி புரிவோர் நினைவு கூர்ந்து அவரைப் பற்றி நல்லவற்றைத் தொல்ந்து கொள்வது மிக மிக அவசியம்.

தமிழகத்தில் நல்ல லாபத்தில் ஓடும் ஸ்தாபனங்களில் டாஸ்மாக்கும் ஒன்று எனச் சொன்னால் இதில் ஏதாவது பெருமை இருக்கிறதா? இன்று இந்த தலைவரது பிறந்த நாள், அதனால் பள்ளி விடுமுறை, அதனால் சிறுவர்கள் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் எனச் சொன்னால், இது நமக்கு வருத்தம் தரும் நிலையில்லையா?

அல்லது இதைப் போன்ற நாட்களில் சினிமாக் கொட்டகைகளும், டாஸ்மாக் கடைகளும், மால்களும் மூடப்படுமா?

ஒரு நல்ல மனிதரை நாம் நினைக்க வேண்டுமென்றால் நாம் செய்யும் காரியங்களுக்கு விடுமுறை அளித்து வீட்டில் அமர்ந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயமா என்ன? யார் இதை ஆரம்பித்தார்கள் என்று தெரியவில்லை. விடுமுறைகள் எந்த நோக்கத்தில் அறிவிக்கப்படுகின்றன? யாரை திருப்தி படுத்த இவை போன்ற தேவையற்ற விடுமுறைகள்?

இன்றைய நிலையைப் பார்த்து வேறு வகையில் நான் பயப்படுகிறேன். ஏனென்றால் இன்று இருக்கும் அரசு ஒரு நாளில் புதியதாக விடுமுறை அளிக்கிறது. நாளை வரும் அரசு வரிந்து கட்டிக் கொண்டு தன் பங்குக்கு மற்றொரு நாளை விடுமுறையாக அளிக்கிறது.

இப்படியும் யோசித்துப் பார்க்கலாமே. யாராவது இந்த அவசரக் காரணத்திற்காக இந்த ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வோம் எனச் சொல்கிறார்களா?

விடுமுறை கொடுத்தால்தான் நம்மை மக்கள் பாராட்டுவார்கள் என்று யாரோ, எப்போதோ தவறாக சொல்லி விட்டிருப்பதன் பலன், இன்று நாம் அனுபவித்து வருகிறோம்.

ஒரு நாள் நம் வேலையை நாம் செய்யா விட்டால் நாட்டிற்கு எவ்வளவு நஷ்டம், அதில் நம் பங்கு என்ன என்பதை ஒவ்வொரு இந்தியனும் உணர வேண்டும். அரசும் உணர வேண்டும்.

அரசியல் காரணங்களுக்காக மட்டுமே அறிவிக்கப்படும் தேவையற்ற விடுமுறைகள் தேவையா என்ற கேள்விகள் இன்று பல தளங்களிலும் எழத் துவங்கியுள்ளது.

இது மிகவும் அவசியமான கேள்வி என்றும் தோன்றுகிறது.

நன்றி :வடக்குவாசல்

No comments:

Post a Comment