நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர்.
Monday, December 21, 2009
குழந்தைகள்- நம் பிரதிபலிப்புக்கள்
அது கொஞ்சம் வித்தியாசமான பள்ளி. வெறும் புத்தகப் படிப்பிற்காக மட்டும் நடத்தப் படுவது அல்ல அந்தப் பள்ளி. பள்ளி நிர்வாகத்திற்கு இன்றைய வெறும் புத்தகப் படிப்பில் மட்டும் நம்பிக்கை இல்லை. பள்ளியில் நுழைந்தவுடன் வெறும் கட்டிடங்கள் உங்கள் கண்களுக்குத் தெரியாது. எங்கு பார்த்தாலும் வெறும் செடிகள், கொடிகள், மரங்கள், வண்ண வண்ண பூக்கள் பூத்துக்குலுங்கும் அழகை எங்கும் அங்கே நீங்கள் காணலாம்.
கட்டிடங்களுக்கு அவ்வளவான முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் அவை அந்தப் பள்ளியில் ஓரத்தில் கட்டப்பட்டிருக்கும். எங்கு பார்த்தாலும் பசுமை. விதவிதமான பச்சையம் நிறைந்த இயற்கைச் சூழல்.
இன்றைய அழுத்தம் நிறைந்த உலகில் பள்ளிக்குள் நுழைந்தவுடன் ஒருவிதமான அமைதியை உணர முடிகிறது என இந்தப் பள்ளி வளாகத்திற்கு வருகை தருபவர்கள் எல்லோருமே சொல்லக்கூடிய வார்த்தைகள். வீட்டில் ஆயிரம் உளைச்சல் இருந்தாலும், ஆயிரம் சச்சரவுகள் நடந்தாலும் இந்த பள்ளி வளாகத்தில் நுழைந்தவுடன் அந்த அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி ஏற்படுகிறது என அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் சொல்வார்கள்.
இப்படிப்பட்ட பள்ளியில் ஒரு நாள்....
அன்று காலை, மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும் என்று பள்ளி மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களும், ஆசிரியர்களும் பாரதியின் பாடலுடன் காலை வணக்கம் துவங்கி, பிறகு 15 நிமிடங்கள் உடல் சுறுசுறுப்புக்காக யோகா, மன நிம்மதிக்காக 15 நிமிடம் தியானம் போன்றவற்றை முடித்து எல்லோரும் தத்தம் வகுப்புகளுக்கு சென்றனர்.
ஒரு வகுப்பில் ஒரு மாணவன் ஒரு நாள் சற்று சோகமாக இருந்தான். வழக்கமாக கலகலப்பாக பேசும் நண்பர்களிடம் இருந்து கூட சற்று ஒதுங்கியே இருந்தான். வகுப்பு ஆசிரியர் கவனித்து சற்று கவலை கொண்டார். அந்த ஆசிரியருக்கு எந்த மாணவராவது சோகமாக இருந்தாலோ, அழுதாலோ பொறுக்காது. இந்த மாணவரைப் பார்த்து ஏன் இப்படி இருக்கிறாய் எனக் கேட்டார். அந்த மாணவர் பதில் சொல்லவில்லை. மற்றமாணவர்கள் "காலையிலிருந்தே இப்படித்தான் இருக்கிறான், எங்களுக்கெல்லாம் கஷ்டமாக இருக்கிறது'' என அந்த ஆசிரியரிடம் சொல்லி வருத்தப்பட்டது கவலை கொள்ள வைத்தது.
வகுப்பு முடிந்ததும் அந்த மாணவரை தனியாக அழைத்து அந்த பள்ளியில் இதற்கெனவே இருக்கும் ஆஉ உயஉத ஏஅடடவ என்ற ஆலோசனை மையத்திற்கு அழைத்துச் சென்றார். சற்று நேரம் அந்த மாணவரை அமரச் செய்து ஒரு அமைதியான நேரத்தை அந்த மாணவருக்கு ஏற்படுத்தி தந்தார்.
அந்த மாணவனுக்கு அது மிகவும் இதமாக இருந்தது. உலகமே பெருத்த மகிழ்ச்சியோடு தன்னை நோக்கி ஓடி வருவதைப்போல உணர்ந்தான். சிறுவயதில் தாயின் மடியில் தூங்கும் போது கிடைக்கும் சுகத்தை அப்போது அந்த மாணவனின் மனம் அடைந்தது. ஆசிரியர் எந்த கேள்வியும் கேட்காமலே, மாணவன் பேச ஆரம்பித்தான்.
"எதற்கெடுத்தாலும் வீட்டில் சந்தேகப் படுகிறார்கள். எந்தப் பாட்டைக் கேட்டாலும் தப்பு கண்டுபிடிக்கிறார்கள். நின்றால் தப்பு, உட்கார்ந்தால் தப்பு. சில சமயங்களில் அப்பா, அம்மா கேட்கும் கேள்விகள் அருவருப்பாக இருக்கின்றன. எனக்கும் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்து சிறப்பாக எதிர்காலத்தில் வாழ வேண்டும் என்றஆசையெல்லாம் இருக்கிறது. போனில் பேசினால் யாரிடம் பேசுகிறாய் எனக்கேட்டு சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். தேர்வு சமயங்களில் இதனாலேயே சரிவர கவனம் செலுத்த முடிவதில்லை'' என அந்த மாணவர் சொல்லி வருத்தப்பட்டார்.
இது எல்லார் வீட்டிலும் இருக்கும் பொதுவான பிரச்னைகள் தான். பெற்றோர்களின் அதீதமான எதிர்பார்ப்பு. குழந்தைகளின் மேலோட்டமான பார்வை. பெற்றோர்கள் தங்களைப் புரிந்து கொள்ளவில்லையே என இன்றைக்குப் பல குழந்தைகள் நினைக்கின்றன.
இதில் கொஞ்சம் தான் உண்மை. குழந்தைகளுக்கு இதில் உண்மையான அர்த்தம் தெரியவில்லை. அவர்களுக்கு ஏதாவது ஒரு சிறிய சிரமம் வந்தால் கூட தன்னை யாரும் புரிந்துகொள்ள வில்லையே என நினைக்கிறார்கள். பெற்றோர்களிடம் கோபப் படுகிறார்கள். சரியாக சாப்பிடுவதில்லை.
இப்படி ஒரு இறுக்கமான சூழ்நிலை பல வீடுகளில் எப்படியோ உருவாகி விடுகிறது.
இதற்குக் காரணம் குழந்தைகள் மட்டுமா?
இல்லை.
பெற்றோர்களும் இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணமாக இருக்கிறார்கள்.
இவர்கள் நினைத்ததையெல்லாம் அவர்களது குழந்தைகளை செய்ய வேண்டும், நூல் பிடித்தாற்போல தொடர வேண்டும் என நினைக்கிறார்கள். ஒரு நண்பர் தான் விரும்பிய சினிமா பாடலைத்தான் தன் குழந்தைகள் தொலைக்காட்சியில் காணவேண்டும் என நினைக்கிறார். அவரது குழந்தை கேட்கும் பாடலில் ஏதாவது அசிங்கமான வார்த்தைகள் இருந்தால் (இருந்தால் என்ன, அதுதான் இருக்கிறது), கண்டபடி அவரது குழந்தைகளை திட்டுகிறார். கோபித்துக் கொள்கிறார். பலரிடமும் சொல்லி வருத்தப்படுகிறார்.
அதில் தவறில்லை. மிக அதிகமான அளவில் குழந்தைகளை திருத்த நினைக்கும்போது, அதுவே வேறு விதமாக போய் முடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
தயவு செய்து இதைப்போல விஷயத்தைப் பெரிதாக்க வேண்டாம். நீங்கள் பார்க்கும் கோணத்தில்தான் உங்கள் குழந்தைகளும் பார்க்கிறார்கள் என நீங்களாக விஷயத்தைக் கையில் எடுத்துக் காரியத்தை மோசமாக்க வேண்டாம்.
இன்னும் சிலர் தங்களது குழந்தைகளைப் பற்றி பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். தங்கள் குழந்தைகளையே எதற்கும் நம்ப மாட்டார்கள். இந்த மாதிரி விஷயத்தில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். சரியானபடி குழந்தைகளைப் புரிந்து கொண்டு நடக்கும் பெற்றோர்கள் மிக மிக குறைவாகவே காணப்படுகிறார்கள்.
அது இந்தியாவிலேயே சிறந்ததொரு Architecture College 3ம் வருட மாணவர்களுக்கு ஒரு தலை சிறந்த பேராசிரியர் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது, மாணவர்களிடம், "இன்றைக்கு காலையில் என் வீட்டிற்கு ஒரு தாயார் வந்து தன் மகனைப் பற்றி அழுது விட்டு போனார். அதாவது தன்னுடைய மகன் வீட்டிற்கு தாமதமாக வருகிறார். சரியாக சாப்பிடுவதில்லை. நாலு கேள்விகள் கேட்டால் ஒரு பதிலைத்தான் சொல்கிறார். அவர் போடும் உடைகளை கண்டாலே எரிச்சல் வருகிறது. நீங்கள் சொன்னால் நிச்சயம் கேட்பார். உங்கள்மேல் நல்ல மதிப்பு இருக்கிறது. அதனால் தான் உங்களிடம் வந்து சொல்கிறேன் என்று அந்த அம்மா சொன்னார்.''
இதை மாணவர்களிடம் சொல்லி விட்டு, இனிமேல் யாரும் இதைப்போல நடக்க வேண்டாம். பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் தங்கள் பிள்ளைகளைப் பற்றி எக்காரணம் கொண்டும் முறையிடக் கூடாது. முதலில் பெற்றோர்களிடம் நீங்கள் நம்பிக்கையும் மதிப்பும் வைத்து உங்கள் மீது உங்கள் பெற்றோர்கள் நம்பிக்கை வைக்கும் வண்ணம் உங்கள் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தினார் அந்த ஆசிரியர்.
இதில் கவனித்தீர்களானால், அந்த தாய் கூறிய "உங்களின்மேல் மதிப்பு'' என்ற வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இதுதான் முக்கியம். பிறர் நம் மேல் மதிப்பு வைத்திருக்கும் பட்சத்தில், அப்படி நாம் நடந்து கொள்ளும் பட்சத்தில், நமக்கும் மதிப்பு, நம் வார்த்தைகளுக்கும் மதிப்பு. அதேபோல வீட்டில் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் மிகவும் அவசியமான நம்பிக்கை. இவைதான் குடும்பத்தில் நிம்மதியைத் தருகின்றன. மாணவர்களின் வளமான வாழ்க்கைக்கு அடித்தளம் இடுகின்றன.
நம்முடைய குடும்பத்தை அன்பாகவும் அமைதியாகவும் வைத்துக் கொள்ளுவது முதலில் பெற்றோர்களிடம் இருக்கிறது. நாம் நம் பெற்றோர்களை மதித்தால், நாளை நம் குழந்தைகள் நம்மை மதிப்பார்கள். நல்ல கண்ணோட்டத்திலேயே எல்லாவற்றையும் காண்போம். நிச்சயம் நம் குழந்தைகளும் அதே போல வளருவார்கள்.
நம் பிரதிபலிப்புத்தான் நம் குழந்தைகள். அதே போல நல்ல புரிதல் கொண்ட பெற்றோர்கள் தான் பிள்ளைகளின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் ஏர்முனைகள்.
நன்றி :வடக்கு வாசல்
Thursday, December 17, 2009
மாணவர்களும் அரசு விடுமுறையும்
மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே எப்போதும் கொண்டாட்டம்தான், எப்போது விடுமுறை வரும் என மாணவர் சமுதாயம் காத்துக் கொண்டிருக்கும், இது ஏறக்குறைய எல்லா இடங்களிலும் நம் நாட்டில் காணக்கூடிய காட்சி. மாலை பள்ளி முடிந்ததும் வெளிச்செல்லும் மாணவர்களின் பேரானந்த நிலைக்கு ஒருபடி மேலான பரமானந்தத்தை விடுமுறை அறிவிப்புக்களின் போது பள்ளிப் பிள்ளைகள் கொண்டாடுகின்றனர்.
பொதுவாக நம் நாட்டு பள்ளிக் கூடங்களில் வருடத்திற்கு 220 நாட்களாவது பணி புரிய வேண்டும் என்ற ஒரு வரையறை இருக்கிறது. பல மெட்ரிக் தனியார் பள்ளிகள் 220 நாட்களை விட அதிக அளவில் வேலை நாட்களை வைத்திருக்கின்றன, ஆனால் சமீப காலத்தில் அரசுப் பள்ளிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் சிறப்பு விடுமுறை அளிக்கின்றது, பல நேரங்களில் இது அரசியல் காரணங்களை சார்ந்தும் அமைகிறது.
இந்த சிறப்பு விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படிப் பொழுதை கழிக்கிறார்கள் என்பது மிக மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்யது நம்முடைய கடமை.
பெரும்பாலான மாணவர்கள் இந்தச் சிறப்பு விடுமுறையில் வீட்டில் தங்குவதில்லை. வெளியே நண்பர்களுடன் இருப்பதையே விரும்புவார்கள், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த சந்திப்புகள் நல்லபடியாக இருந்தால் பரவாயில்லை, இதைப் போல நாட்களில் சினிமா கொட்டகைகள் நிரம்பி வழிகின்றன. பள்ளிகளில் விடுமுறை அறிவித்தால் நகரின் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடங்கள் பலவற்றிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றன.
முக்கிய பிரமுகர் பிறந்த நாள் அல்லது இறந்த நாள் போன்றவற்றை, கட்டாயம் நாம் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணி புரிபவர்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் பணி புரிவோர் நினைவு கூர்ந்து அவரைப் பற்றி நல்லவற்றைத் தொல்ந்து கொள்வது மிக மிக அவசியம்.
தமிழகத்தில் நல்ல லாபத்தில் ஓடும் ஸ்தாபனங்களில் டாஸ்மாக்கும் ஒன்று எனச் சொன்னால் இதில் ஏதாவது பெருமை இருக்கிறதா? இன்று இந்த தலைவரது பிறந்த நாள், அதனால் பள்ளி விடுமுறை, அதனால் சிறுவர்கள் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் எனச் சொன்னால், இது நமக்கு வருத்தம் தரும் நிலையில்லையா?
அல்லது இதைப் போன்ற நாட்களில் சினிமாக் கொட்டகைகளும், டாஸ்மாக் கடைகளும், மால்களும் மூடப்படுமா?
ஒரு நல்ல மனிதரை நாம் நினைக்க வேண்டுமென்றால் நாம் செய்யும் காரியங்களுக்கு விடுமுறை அளித்து வீட்டில் அமர்ந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயமா என்ன? யார் இதை ஆரம்பித்தார்கள் என்று தெரியவில்லை. விடுமுறைகள் எந்த நோக்கத்தில் அறிவிக்கப்படுகின்றன? யாரை திருப்தி படுத்த இவை போன்ற தேவையற்ற விடுமுறைகள்?
இன்றைய நிலையைப் பார்த்து வேறு வகையில் நான் பயப்படுகிறேன். ஏனென்றால் இன்று இருக்கும் அரசு ஒரு நாளில் புதியதாக விடுமுறை அளிக்கிறது. நாளை வரும் அரசு வரிந்து கட்டிக் கொண்டு தன் பங்குக்கு மற்றொரு நாளை விடுமுறையாக அளிக்கிறது.
இப்படியும் யோசித்துப் பார்க்கலாமே. யாராவது இந்த அவசரக் காரணத்திற்காக இந்த ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வோம் எனச் சொல்கிறார்களா?
விடுமுறை கொடுத்தால்தான் நம்மை மக்கள் பாராட்டுவார்கள் என்று யாரோ, எப்போதோ தவறாக சொல்லி விட்டிருப்பதன் பலன், இன்று நாம் அனுபவித்து வருகிறோம்.
ஒரு நாள் நம் வேலையை நாம் செய்யா விட்டால் நாட்டிற்கு எவ்வளவு நஷ்டம், அதில் நம் பங்கு என்ன என்பதை ஒவ்வொரு இந்தியனும் உணர வேண்டும். அரசும் உணர வேண்டும்.
அரசியல் காரணங்களுக்காக மட்டுமே அறிவிக்கப்படும் தேவையற்ற விடுமுறைகள் தேவையா என்ற கேள்விகள் இன்று பல தளங்களிலும் எழத் துவங்கியுள்ளது.
இது மிகவும் அவசியமான கேள்வி என்றும் தோன்றுகிறது.
நன்றி :வடக்குவாசல்
Wednesday, December 16, 2009
நண்பனுக்கு கடிதம் 5:நீதித்துறை சந்தேக துறை
நலம்.நலமறிய ஆவல்.நீ எனது பதிவுகளை படித்து வருகிறாய் என நினைக்கிறேன்.உனது கருத்துரைகளுக்கு நன்றிகள்.நண்பா இப்போது தமிழ் நாட்டில் இடைதேர்தல் விழா நடந்து வருகிறது என ஊடகங்கள் மூலமாக தெரிந்து வருகிறேன்.வந்தவாசியிலும்,திரு
நண்பா ! இது வரையிலும் காசாப் பாதுகாப்பு மற்றும் வழக்குக்காக முப்பத்தி நான்கு கோடியை அரசாங்கம் செலவு செய்துள்ளது .
இந்த காசாப் அன்றைக்கு அந்த இடத்திலே சுட்டு கொல்லபட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..கடந்த ஒரு வருடத்தில் அவனிடம் நடத்திய விசாரணைக்கு என்ன பயன் என்பது என்னவென்றே தெரியவில்லை .
நீதிதுறை அரசியல் தலையீடு இன்றி சுதந்திரமாக செயல் பட்டால் தான் சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பது உனக்கு தெரியாதது இல்லை.ஆனால் இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அரசியல் தலையீடுகளின் மூலமாக தான் தேர்வு செய்யபடுகிறார்கள் என்பது கசப்பான உண்மை .பதவியேற்றவுடன் முதல்வரை சந்திப்பது ஆசி பெறுவது எல்லாம் அதனுடைய தொடர்ச்சியே.
நண்பா! ஊழலில் மூழ்கி இருக்கும் அரசியல்வாதிகள் தவறுகள் செய்யும்போது இந்த நீதியரசர்களால் எப்படி நேர்மையான முறையில் தீர்ப்பு வழங்க முடியும் ?
நீதி துறையின் கருப்பு ஆடுகள் இருக்கும் வரை நியாயம் என்பது கேள்விகுறிதான் .இத்துடன் முடிக்கிறேன் .
என்றும் அன்புடன்
கருத்து சுதந்திரம்
Friday, December 11, 2009
ஒரு நடிகன் என்பவன் யார் ?- ஜெயகாந்தன்
சரி ஒரு நடிகன் என்பவன் யார் ? அவனது எல்லைகள் தான் என்ன என்பது குறித்து முதலில் இந்த நடிகர்களாவது புரிந்து கொள்ள வேண்டும். அவ்விதம் புரிந்து கொண்ட ஏற்றங்கள் தான் அவர்களூக்கு நிலைக்கும்.
நடிகன் ஒரு கலைஞன்.; எனினும் சமுதாயத்தில் ஒரு கவிஞனுக்கோ (பாடல் ஆசிரியன் அல்ல) ஒர் எழுத்தாளனுக்கோ (சினிமா வசன கர்த்தா அல்ல) ஒரு விஞ்ஞானிக்கோ உரிய ஸ்தானத்தை அவன் பெறவும் முடியாது, பெறவும் கூடாது.
ஆனால் கவிஞனை விடவும், எழுத்தாளனை விடவும் அவனது பொருளாதார அந்தஸ்து உயர்வடைவது இயல்பு. நமது கவலை அது குறித்தது அல்ல.
ஆனால் நடிகன் என்பவன் சித்தாந்தியோ , ஒரு அரசியல் தலைவனோ அல்ல என்பதை நடிகன் என்ற முறையில் அவனாவது உணர்ந்திருக்க வேண்டும்.
இவர்கள் கலை விழாக்களில் மட்டுமே விருதுகள் தரப்பட்டு முதலிடத்தில் அமர்த்தப்பட்டுக் கெளரவிக்கப் பட வேண்டும். இதை அரசாங்கமும் மக்களும் செய்யலாம். ஆனால் தேசீயக் கொடியைக் கூட வணங்கத் தெரியாத மூட ரசிகர்களின் பொறுப்பில்லாத புலைத் தனமான ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் உயர்ந்த ரசனை என்று எண்ணுகின்ற அறியாமை, அல்லது அதைத் தூண்டிவிடும் ஒரு சமூகக் கயமை இந்த நடிகர்களிடலிருந்து முற்றாக விலகி ஒழிவது அவசியம். கூலிப் பட்டாளங்களை அமர்த்தி கோஷமிடவும், இன்னொரு நடிகனின் படத்தைக் கொளுத்தவும் , ஒழிக்கவுமான காரியங்கள் நடை பெறுவது கலைத் துறையில் தமிழர்களின் அநாகரீகத்தின் சிகரமாக எனக்குப் படுகிறது.
இவர்களிடம் பணக்காரர்களின் பெருந்தன்மையும் இல்லை. ஏழைகளின் சிறப்பான மனிதாபிமானங்களும் இல்லை. மாறாக இவர்களிடம் பணக்காரர்களின் ஆதிக்க மனோபாவமும், ஏழைகளின் சிறுமைக் குணங்களும் ஒட்டு மொத்தமாய்ச் சங்கமித்து இருக்கின்றன.
ஆகவே இந்தப் போட்டி உணர்ச்சியினால் தங்களிடம் இருக்கும் பணப் பெருமையைப் பயன் படுத்தி இவர்கள் எல்லாக் கோயில்களிலும் கர்ப்பக் கிரகத்தில் இடம் தேடி அமரப் பார்க்கிறார்கள். இது இவர்களின் தன்னம்பிக்கையின்மையையே காட்டுகிறது.
ஆகவே இவர்கள் தாங்கள் சம்பந்தப் பட்டிருக்கும் துறையில் பணத்தைத் தவிர வேறு எதையுமே வளர்க்காமல், மக்களின் ரசனையை வளர்க்கப் பொதுவான கோட்பாடுகள் எதுவுமே இல்லாமல், பிற நாட்டுச் சினிமா கலையின் பெருமை நம் நாட்டிற்கு இல்லையே என்ற மன அரிப்புக் கூட இல்லாமல், தங்களைச் சுற்றி ஒரு வழிபாட்டு உணர்ச்சியை வளர்த்துக் கொள்வதிலேயே முனைந்து அதில் திருப்தியுறுகிற சுய திருப்திக் காரர்களாய் மந்தமுற்றுக் கிடக்கின்றனர்.
இவர்களைச் சமூகமும் சரிவரப் பயன் படுத்திக்கொள்ளவில்லை.
சமூகத்தை இவர்களும் சரிவரப் பயன் படுத்திக் கொள்ளவில்லை. மாறாக இரண்டு துறைகளிலும் தவறான போக்கே தறி கெட்டு வளர்ந்திருக்கிறது.
தேசத் தலைவர்களுக்கு இணையாக இவர்கள் பொது நிகழ்ச்சிகளில் வேஷம் போடுவதைக் கைவிட வேண்டும். மக்களும் இவர்களைத் தேசீயப் பெருமைக்கெல்லாம் மேலாகவும், தெய்வங்களுக்கு இணையாகவும் வழிபடும் மடமையிலிருந்து விடுபட வேண்டும். இதனால் ஒரு தேசீய அவமானமே விளைகிறதென்பதைச் சொல்கிறவன் மீது கோபப் படாமல் இரு சாராரும், இந்தத் தேசத்தின் பண்பாட்டு வளர்ச்சியைக் கருதிப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நடிகன் அவன் சம்பந்தப் பட்டதுறை தவிரப் பிற துறைகளில் ஒரு சாதாரண மனிதனே. பெரும் பான்மையான ஒரு தரத்தில் அவன் சராசரிப் பாமரனே என்பதைச் சிந்தித்து அளந்து அறிந்து வைத்துக் கொள்வது ஒரு பொறுப்பான சமூக ஜீவியின் சமுதாயக் கடமை. மற்றபடி இன்று இந்த நடிகர்கள் தகுதியில்லாத ஸ்தானத்திற்கு உயர்த்தப் பட்டு இருப்பதற்கு நான் இந்த நடிகர்களை மட்டும் குற்றம் சொல்லத் தயாராக இல்லை. அது எந்த அளவுக்கு நமது அரசாங்கத்தின் குற்றமோ, நமது சமூக விதியின் குற்றமோ அந்த அளவுக்கு நடிகர்களீன் குற்றமும் ஆகும். இந்த மூன்று பிரிவினரில் யாராவது ஒருவர் இதைக் களைய முன்வந்தால் தான் இந்ஹ்தக் குற்றம் சீர் திருந்தும். இந்தச்ச் சாபம் விமோசனம் அடையும்.
(ஒரு இலக்கிய வாதியின் கலையுலக அனுபவங்கள் : 1980)
ஜனநாயகம் என்ன ஆகிறது ?
உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு .ஐம்பது கோடி மக்கள் தங்களை ஆளுகின்ற தலைவரை தேர்ந்து எடுகிறார்கள் என்று உலக சமுதாயம் ஆச்சிரியப்பட்டு நிமிர்ந்து பார்கிறார்கள் .நாமும் காலரை தூக்கிவிட்டு பெருமைபடுகிறோம் .மின்னணு எந்திரம் மூலம் பல தேர்தல்களை சந்தித்து ஆயிற்று .இதில் பல தில்லு முல்லுகள் நடக்கிறது என்றும் அதிகாரம் தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது என்று தோல்வி அடைந்த கட்சி வெற்றி அடைந்த கட்சியை பார்த்து கொக்கரிக்கிறது .
இதற்கு ஒரு சின்ன உதாரணம் சிவகங்கையில் சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டது .ஓட்டு சீட்டு முறையில் எண்ணும்போது மனித தவறுகள் நடக்க வாய்ப்புகள் ஏராளம் .ஆனால் மின்னணு வாக்கு பதிவில் எப்படி,இந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்றவராக அறிவிக்கபட்டவர்,பின்னர் ஜெயித்தவராக அறிவிக்கபட்டார் சாதாரண வாக்காளனின் மில்லியன் டாலர் கேள்வி .
ஜனநாயகம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்க பட்டு மக்களால் ஆட்சி செய்யப்படும் முறை .ஆனால் அரசியல் வாதிகள் பரம்பரை ஆட்சியோ ?என்று கேள்வி எழுவதற்கு ஏற்ப நடந்து வருகிறார்கள் .மகாத்மா காந்தியோ,ஜவகர்லால் நேருவோ,காமராஜரோ ,அண்ணாவோ ,மற்ற சுதந்திர பேராட்ட தலைவர்களோ அவர்களுக்கு என்று எந்த அரசியல் வாரிசையும் உருவாக்கவில்லை .இந்திரா காந்தி காமராஜரால் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டவர் .
ஆனால் இன்று நடப்பது என்ன ?அப்பா முதல் மந்திரி என்றால் மகனும் பேரனும் வருங்கால முதல் மந்திரிகள் .திரும்பவும் மன்னர் பரம்பரை ஆட்சிவந்து விடுமோ என்ற ஐயம் எழுகிறது .மன்னர்கள் உடல் முழுதும் நகைகள் அணிந்து மக்களை பற்றி சிந்திக்காமல் அந்தபுரத்தில் ராணிகளுடன் கும்மாளம் இட்டார்கள் என்பது வரலாற்று செய்திகள் .பெரும் மன்னர்களுக்கு குறுநில மன்னர்கள் கப்பம் கட்டினர் .கிட்டத்தட்ட அதுபோல் தான் இப்போது நடக்கிறதோ என்றும் தோன்றுகிறது .
பெரிய கட்சி (மாமன்னர் ) மிகவும் வருமானம் தரக்கூடிய தொழில் துறைகளில் முதலீடு செய்துவிட்டு சட்டத்தை வளைத்து அதிகாரத்தை பயன்படுத்தி ,குறுநில மன்னர்கள் (சிறுகட்சிகள் )துணையுடன் ஆட்சியை பிடித்துவிட்டு பிறகு குறுநில மன்னர்களை அடிமையாக வைத்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் .
மத்தியில் ஆட்சியில் பங்கு கேட்பவர்கள் மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை பங்கு போட விரும்புவதில்லை (தி மு க VS காங்கிரஸ் )
இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் தனக்கும் தனது பரம்பரைக்கும் சொத்து சேர்பதுடன் தனது சொத்தை பாதுகாக்க தனது வாரிசை அரசியலுக்கு கொண்டு வருகிறார்கள் .கட்சிக்காக உழைக்காமல்,மக்கள் பிரச்சினைக்காக போராடாமல் சிறை வாசம் அனுபவிக்காமல் சிறுவயதிலிருந்தே சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அரசியல்வாதியின் வாரிசு நேரடியாக தலைவர் பதவிக்கு வந்து முதல் அமைச்சராகவும் ஆகி விடுகிறான் .
அடிமட்டத்தில் இருந்து மக்களோடு மக்களாக கலந்து மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி காவல் நிலையத்தில் லத்தி அடி வாங்கி ரத்தம் சிந்தி அரசியல் ஞானம் கற்று தெளிந்து அரசியல் தலைவரின் கோட்பாடுகள் (?)கொள்கைகள் (?) போன்றவைகளை மேடைகளில் முழங்கி வழக்குகளால் முடக்கப்படும் உண்மையான மக்கள் தொண்டன் கடைசி வரை அடிமட்ட தொண்டனாகவே இறந்து போகிறான் .
ஒவ்வொரு தொண்டனும் சிந்திக்க வேண்டிய தருணம் இது
Wednesday, December 9, 2009
ஊழலின் ஊற்றுக்கண்!
உலக ஊழல் ஒழிப்பு தினம் என்று ஆண்டுக்கொரு முறை ஊழலுக்கு எதிரானவிழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது என்பதே அவமானகரமானவிஷயம். கொலை கொள்ளை ஒழிப்புதினம், விபசார ஒழிப்பு தினம், உண்மைபேசும் தினம் என்றெல்லாம்கூட ஏற்படுமோ என்று பயமாக இருக்கிறது.
ஊழல் என்பது உலகளாவிய விஷயமாகிவிட்டது என்பதால் அதை அன்றாடவாழ்க்கையின் அம்சமாகவே பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டு விட்டதாகத்தோன்றுகிறது. ராஜா ராணி காலத்திலிருந்து ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாகஇருந்தவர்கள் அதிகப்படியான சலுகைகளை அனுபவிப்பது என்பது புதிய விஷயமல்ல. அதேபோல, ஆட்சியாளர்களில் பலர் குடிமக்களின் நலனைப் பற்றியே கவலைப்படாமல் சகல சௌபாக்கியங்களுடன் ராஜபோகமாக ஊதாரி வாழ்க்கைவாழ்ந்த சரித்திரம் உலகளாவிய ஒன்று.
ஆட்சியையும் அதிகாரத்தையும் ஒரு சிலர் பரம்பரை பாத்தியதை கொண்டாடிவருவதையும், குடிமக்களின் நல்வாழ்வைப் பற்றிய சிந்தனையே இல்லாமல்ஆட்சியாளர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் செயல்பட்டு வருவதையும் பார்த்து மக்கள் கொதித்து எழுந்ததன் விளைவுதான் மன்னர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதும், மக்களாட்சி மலர்ந்ததும். நியாயமாகப் பார்த்தால்மக்களாட்சியில் லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், ஒரு சிலர் தனிச் சலுகைகள் பெறுவது போன்றவற்றுக்கே இடம் இருக்கலாகாது.
ஆட்சி முறை மாறியதே தவிர மன்னராட்சியின் தவறுகளும் குறைபாடுகளும்களையப்பட்டனவா என்று கேட்டால் உதட்டைப் பிதுக்க வேண்டி இருக்கிறது. பரம்பரை ஆட்சிக்குக்கூட மக்களாட்சியில் முற்றுப்புள்ளி வைக்க முடியாதநிலைமை. ஜார் மற்றும் பதினெட்டாம் லூயி மன்னர்களுக்குப் பதிலாக ஹிட்லர், முசோலினி, இடி அமின் என்று சர்வாதிகாரிகளும், மக்களைப் பற்றிய கவலையேஇல்லாமல் தங்களது மனம் போன போக்கில் நடந்த ஆட்சியாளர்களும் மக்களாட்சியிலும் தொடர்வதுதான் வேடிக்கை.
வளர்ச்சி அடைந்த நாடுகள், வளர்ச்சி அடையாத நாடுகள் என்கிற வேறுபாடேஇல்லாமல், மக்களாட்சி, சர்வாதிகார ஆட்சி, ராணுவ ஆட்சி என்றெல்லாம் வித்தியாசம் பாராமல் எங்கும் எல்லா இடத்தும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள்போல லஞ்சமும், ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும், தனிநபர் சலுகைகளும்பரந்து விரிந்திருப்பது மனித சமுதாயத்துக்கே களங்கமாகவும் அவமானமாகவும்தொடர்கிறது.
லஞ்ச ஊழலைப் பொறுத்தவரை ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இது படித்தவர்களின் தனிச்சொத்து என்பதுதான். கிராமங்களில் படிக்காதஏழை விவசாயியோ, தொழிலாளியோ லஞ்சம் வாங்கவும், ஊழல் செய்யவும்வாய்ப்பே இல்லாதவர்கள். அரசு அலுவலர்களானாலும், காவல்துறையினரானாலும் அவர்கள் படித்தவர்கள். அவர்கள்தான் லஞ்சம் வாங்குகிறார்கள். அப்பாவிஏழைகளும், படிப்பறிவில்லாதவர்களும், சாமானியர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் இந்தப் படித்த "கன'வான்களின் பேராசைக்குத் தீனி போட வேண்டிய நிர்பந்தம்.
பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் பதவி ஏற்றதும் ஊழலுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டு, கைது செய்யப்பட்ட 365 அரசு ஊழியர்களில் 300 பேருக்கும் அதிகமானவர்கள் கோடீஸ்வரர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளில், சுமார் 1000 அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இவர்களில் சிலர் சிறைத் தண்டனையும் அனுபவித்தவர்கள். ஆனாலும் இவர்களில் ஒன்றிரண்டு கணக்கர்களும், கடைநிலை ஊழியர்களும் தவிர யாரும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. வழக்குகள் தொடரப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றனவே தவிர தீர்ப்பு எழுதப்படவில்லை. இவர்களைப் பதவி நீக்கம் செய்ய மேலதிகாரிகள் தயாருமில்லை. பிகாரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே உள்ள நிலைமை இதுதான்.
ஐம்ப துகளில் உள்துறை அமைச்சராக இருந்த குல்ஜாரிலால் நந்தாவில்தொடங்கி எத்தனை எத்தனையோ பிரதமர்களும், உள்துறை அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் ஊழலுக்கு எதிராகப் போரை அறிவித்து விளம்பரம் தேடிக்கொண்டார்களே தவிர ஊழல் ஒழியவும் இல்லை. ஊழலுக்கு எதிரான வாய் சவடால் குறையவுமில்லை.
அரசி யல் தலைவர்களின் ஊழலைக்கூடப் புரிந்து கொள்ளலாம். தேர்தலுக்குச்செலவு செய்த பணத்தை லஞ்சம் வாங்கி ஈடுகட்டி, அடுத்த தேர்தல்களுக்கானபணத்தைச் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார்கள் என்று சமாதானம் சொல்ல முடியும். கொள்ளை அடித்துக் கொள்ளவும், லஞ்சம் வாங்கிக் கொள்ளவும் மக்கள்அவர்களுக்கு வாக்களித்து அனுமதி வழங்கி இருக்கிறார்கள் என்று மனதைத்தேற்றிக் கொள்ளலாம்.
ஆனால், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள், மக்களிடமே லஞ்சம் வாங்குவது எந்த விதத்தில் நியாயம்? வாங்கும் சம்பளம் தங்களதுதகுதிக்கும் திறமைக்கும் ஏற்றதாக இல்லையென்றால் ராஜிநாமா செய்துவிட்டுவேறு வேலை பார்த்துக் கொள்வதுதானே? மக்களாட்சியில் மக்களுக்காக உழைப்பதற்காக மக்களால் சம்பளம் கொடுத்து நியமிக்கப்பட்டிருக்கும் வேலைக்காரர்கள், மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற மக்களிடமே லஞ்சம் வாங்குவதுதடுக்கப்பட்டால் ஒழிய, லஞ்சமும் ஊழலும் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகத்தொடர்வதைத் தடுக்க முடியாது.
லஞ்சமும் ஊழலும் படித்தவன் செய்யும் தவறு. "இவனெல்லாம் படித்தால் என்ன, படிக்காமல் போனால் என்ன?' என்று கேட்கத் தோன்றுகிறதா? படிக்காவிட்டால்லஞ்சம் வாங்க முடியாதே...!
நன்றி :தினமணி தலையங்கம்