Saturday, November 6, 2010

இந்திய சுகாதாரத்தின் சவால்கள் -குப்பையும் பான்பராக் கறையும் .


சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில இருக்கும் இந்தியாவின் மக்கள் தொகை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.அதற்கு ஏற்ப புது புது நோய்கள் பரவி வருகிறது .இதற்கெல்லாம் முடிவு என்பது தனிமனித சுகாதாரத்திலும் தனிமனித பொறுப்புணர்ச்சியிலும் தான் உள்ளது .இந்த வகையில் இந்திய சுகாதாரத்தை கெடுப்பது குப்பையும் ,பான்பராக் புகையிலை கறையும் என்றே நினைக்கிறன் .

சென்னை எந்த அரசாங்க கட்டிடத்திலும் சரி ஒரு சில தனியார் கட்டிடங்களிலும் சரி மாடி படிகளில் எங்கு பார்த்தாலும் பான்பராக் புகையிலை கறைகளை காணலாம்.அந்த இடங்களை கடக்கும் போது கைகுட்டையால் மூக்கை பிடித்து சென்ற அனுபவம் உங்களில் பலபேருக்கு கிடைத்து இருக்கும் .

இந்தியாவின் சுகாதாரத்துக்கு சவால் விடும் வகையில் அமைத்து இருக்கிறது
பான்மசாலா மற்றும் புகையிலை இத்யாதிகள் .சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில்
சுத்தத்திற்கு மிகவும் முன்னுரிமை வழங்கபடுகிறது .சிங்கப்பூரில் ஒரு பாக்கெட்
சிகரட்டின் விலை இந்திய ரூபாய்க்கு ஏழுநூறு ரூபாய் .ஆனால் இந்தியாவில் முப்பது ரூபாய்க்கு கிடைகிறது.சிங்கபூரில் நாம் கண்ட இடங்களில் துப்பினால் அபராதம் விதிக்கிறார்கள்.ஆனால் இந்தியாவில் சகட்டு மேனிக்கு பன்மசாலாவை மென்று கண்ட கண்ட இடங்களில் துப்புகிறார்கள்.மும்பை ரயில் நிலையங்களில் மற்றும் மும்பை புறநகர் ரயில்களில் இந்த பன்மசாலா ஆசாமிகள் ரயில்களுக்கு அபிசேகம் செய்வதை நிறைய பார்க்கலாம் .

ஏதாவது புதிய ரயில் பெட்டியை சேர்த்தால் இரண்டு நாட்களில் அதன் நிறம் சிவப்பு கலராகி விடுகிறது .இந்த பன்மசாலா மற்றும் புகையிலையால் வருகின்ற கேடுகளை பற்றி அரசாங்கம் பல வழிகளில் பிரசாரம் செய்து வருவது நமக்கு தெரியும் .அதுபோல் அதான் கேடுகள் குறித்து தெரிந்து இருந்தும் நாம் அதை கடைகளில் விற்பதற்கு அனுமதிப்பது
அரசாங்கமே தனது மக்களுக்கு மெதுவாக கொல்லும் விஷம் கொடுப்பதை போன்றது .பான்பராக் புகையிலை இத்யாதிகள் இந்திய சுகாதாரத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் சவால் விடுபவை.

இந்தியாவைப் பொறுத்தவரை குப்பைகள் மிகுந்த நாடு என வெளிநாட்டவர்களால் கேலி பேசப்படும் அளவுக்கு மாறிவிட்டது. சரி இவர்கள்தான் நம்மை இளக்காரமாகப் பேசுகிறார்களே என்றால் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் பேசும்போது, குப்பைகள் அதிகமாக இருப்பதற்காக இந்தியாவுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என கிண்டலாகப் பேசியுள்ளார். கிண்டலோ..சீரியúஸô இன்றைய நிலையில் குப்பைகள் குவிந்த நாடு இந்தியாதான் என்பதை மறுப்பதற்கில்லை.

இது போதாது என்று வெளிநாடுகளில் இருந்து கதிரியக்க கழிவுகள் மற்றும் E -Wastage எனப்படும் கம்ப்யூட்டர் கழிவுகள் இந்தியாவுக்கு குறைந்த கட்டணத்தில் விற்கபடுகின்றன.அதை இறக்குமதி செய்து மறுசுழற்சி செய்கின்றன சில நிறுவனங்கள்.மறுசுழற்சி செய்ய முடிந்த பொருள்களுடன் மறுசுழற்சி செய்ய முடியாத பொருள்களையும் அனுப்புகின்றன வளர்ந்த நாடுகள்.மொத்தத்தில் அவர்கள் குப்பையை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்றி விட்டார்கள்.இந்த விசயத்தில் அரசு மிகவும் கடுமையாக நடந்து கொள்ளவேண்டும்.மறுசுழற்சி செய்ய பெருள்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்க படவேண்டும்.
அமெரிக்கா போன்ற நாடுகள் நல்லது செய்வது போல செய்து அவர்கள் நாட்டை தூய்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.

நாட்டில் நாளுக்குநாள் குப்பைகளின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் மக்கள் மனது வைத்தால் மட்டுமே இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

குப்பைகளைச் சேகரித்து அதை இயற்கை உரமாக மாற்றுதல், மின்சாரம் தயாரித்தல் என பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.அதில் நமது சென்னை மாநகராட்சியின் பணி மிகவும் பாராட்டப்பட வேண்டியது.என்னதான் அரசாங்கம் செயல்பட்டாலும் குப்பையை அகற்றுவதிலும் சுகாதாரம் பேணுவதிலும் தனிமனித பங்கு இன்றியமையாதது.

சிங்கப்பூர், மலேசியா, கொரியா போன்ற பல நாடுகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகிறது. குப்பைகளை எங்குமே பார்க்க முடியாது. ஆனால், நம் நாட்டிலோ குளம், குட்டை, ஆறு, நீர்த்தேக்கங்களில் கழிவுகள்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. நம் ஊரில் அவசரத்துக்கு டிரான்ஸ்பார்மர்களும் கூட ஒதுங்குமிடமாகிவிட்டது வேதனை தரும் விஷயம்.

பொதுவாக, சில கடைகளில் மட்டுமே காகிதத்தைப் பயன்படுத்துகின்றனர். இன்னும் பல கடைகளில் பாலிதீன் கவர்களின் உபயோகம் காணப்படுகிறது. இதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும். புகை பிடிப்போருக்கு அபராதம், நடவடிக்கை என சில காலம் பரபரப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்புறம் பழைய மாதிரியாகி விட்டது. அதே நிலைதான் பாலிதீன் தடுப்பு நடவடிக்கையிலும் காணப்படுகிறது. எனவே மாற்றம் என்பது மக்கள் மனதில் தானாக ஏற்பட வேண்டும். கையில் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இலைகளைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் குடங்களுக்குப் பதில் மண் பானைகளைப் பயன்படுத்தலாம். வீடுகளில் உள்ள குப்பைகளைத் தோட்டங்களில் உரமாகப் பயன்படுத்தலாம்.

இதுபோல அலுவலகம், ஹோட்டல் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருமே ஒன்றிணைந்து செயல்பட்டால் குப்பைகளை அறவே இல்லாது அகற்றலாம். சுகாதாரக்கேட்டையும் தவிர்க்கலாம். மேலும், தொண்டு நிறுவனங்கள், ரசிகர் மன்றங்கள், சுயஉதவிக் குழுவினர், பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் குப்பைகளை அகற்றுவதைச் சேவையாகச் செய்யலாம். சாலைப் பாதுகாப்பு வாரம், சுகாதார வாரம் என்பதைப் போல குப்பை ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்கலாம். நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களைக் கொண்டு குப்பைகளை அகற்றலாம்.

இது தவிர, அரசு மகளிர் குழுக்களைப் பயன்படுத்தி குப்பையிலிருந்து உரம் தயாரித்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆகியவற்றைச் செம்மையாகச் செயல்படுத்தலாம்.

இந்த விஷயத்தில் மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்தினால் குப்பை இல்லா மற்றும் சுகாதரமான நல்லுலகு தொட்டுவிடும் தூரத்தில்தான் உள்ளது. மனது வைப்பார்களா?

3 comments:

  1. /மனது வைப்பார்களா?/
    வைப்பார்கள் என நான் நினைக்கவில்லை.நாம் நமது குப்பையை தெருவில் கொட்டுவோர்.

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை! தொடருங்கள்... நன்றி!!

    ReplyDelete
  3. தங்கள் ஊக்கத்திற்கு நன்றி ..

    ReplyDelete