Wednesday, December 22, 2010

நாவடக்கம்


“பேரரசன் ஒருவனிடம், வலிமை மிக்க யானை ஒன்று இருந்தது. போர்க்களம் செல்லும் போதெல்லாம் அதன் உடல் முழுவதும், வாட்கள் நிறைந்த கவசங்களால் மூடப்பட்டிருக்கும். அதன் வாலிலும் இரும்புக் குண்டு ஒன்று இணைக்கப் பட்டிருக்கும். அந்த யானையின் துதிக்கையில் அம்பு படாமல் இருக்க, துதிக்கையை நன்றாகச் சுற்றி வைத்துக் கொள்வதற்குப் பழக்கியிருந்தான் பாகன்.

ஒரு நாள், போர்க்களத்தில் அரச யானை புகுந்து எதிரிப் படைக்குப் பேரழிவைத் தந்தது. அதன் அங்கங்களில் பொருத்தப்பட்டிருந்த ஆயுதங்களில் ஒன்று கீழே விழுந்ததும், அதை எடுக்க… அதுவரை வளைத்து வைத்திருந்த துதிக்கையை நீட்டியது யானை. இதைக் கண்ட பாகன், துதிக்கையின் மீது எதிரிகள் ஈட்டியை எறிவதற்குள் விரைவாகக் களத்தில் இருந்து அந்தக் களிறை வெளியேற்றினான். அரண்மனையில் அரசனைச் சந்தித்த பாகன், ‘அரசே, நம் யானை இன்று போர்க்களத்தில் தனது துதிக்கையை நீட்டிவிட்டது. இனி அது போருக்குப் பயன்படாது’ என்றான்.

ராகுலா! மனிதர்கள் தங்கள் நாவை அடக்கும் வரை நன்மை அடைவர். துதிக்கையைச் சுருட்டி வைக்கும் வரைதான் யானைக்குப் பாதுகாப்பு. நாவைக் கட்டுப்படுத்திப் பொய் பேசுவதைத் தவிர்த்தால்தான் தீமையில் இருந்து மனிதருக்குப் பாதுகாப்பு என்றார் புத்தர்.

மனதில் மாசு இருந்தால்தான் நாக்கு பொய் பேசும். மனதை அடக்காமல் நாக்கை அடக்குவதால் நன்மை இல்லை.

நன்றி :கொல்லிமலை ஆனந்தன்

No comments:

Post a Comment