“நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு”. இரண்டும் ஒன்றாகி விட முடியுமா? நீங்கள் எத்தனைபேரை வேண்டுமானாலும் சுலபமாக முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை.
இதற்கு சொல்வேந்தர். சுகிசிவம் கூறும் உதாரணம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண் தனது முப்பத்துஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள். “அப்பா.. ஒரு குட்டிக் குரங்கு… தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு… அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு… காட்டாத்து வெள்ளம்… திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது… அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது.. பயங்கர வெள்ளம் கீழே… அது எப்படித் தப்பிக்கும் சொல்லுங்கள்?” என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.
அரைமணி நேரம் மாறி மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். “அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும் … தெரியலை, நீயே சொல்லு” என்றார் மகளிடம். “ஆம்… இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை… அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?” என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள்.
அந்தச் சின்னப் பெண். அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை; ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம் தான் எங்கும் நடக்கிறது.
பிறரை வாய் மூடச் செய்வது, செயலிழக்கச் செய்வது, தோற்றுப் போகச் செய்வது, ஆளவிடாமல் தடுப்பது, முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது… இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறோம். இந்தத் தவறுதலான எண்ணத்திலிருந்து தயவு செய்து வெளியே வரவேண்டும். பிறரைத் தோற்கடிப்பது லட்சியமல்ல… நமது வெற்றியே நமது குறிக்கோள் என்கிற தெளிவு இருக்க வேண்டும்.
நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஒரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.
“நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு, பிறரைத் தோற்கடிப்பதே வெற்றி என்று தவறுதலாக அர்த்தம் கொள்ள வேண்டாம்”.
No comments:
Post a Comment