Thursday, September 30, 2010

புதுமை படைத்தல்


புதுமை என்றாலே புது விஷயங்கள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தவறு! புதுமை என்றால் முதலில் ஓர் அவா, தாகம். அடுத்தது மனிதர்கள். மூன்றாவது புதிய சிந்தனை. உலகத்தின் மிகச் சிறந்த புதிய சிந்தனைகள் தோற்றுப் போயிருக்கின்றன. ஏனென்றால் மனிதர்கள் அவற்றை முழுமனதாக ஏற்கவில்லை; அவர்கள் மனதில் ஆவல் பொங்கவில்லை.

புதுமைகள் புரட்சிகளாக மாறுவதற்கு, நம்மை முற்றிலும் புதிய தளத்துக்கு அழைத்துச் செல்வதற்கு, பேரவா கொண்ட மனிதர்கள் அவசியம் தேவை. ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு புதிய சிந்தனையை வைத்துக் கொண்டு மக்கின்டாஷ் கணிப்பொறியை உருவாக்கவில்லை. தன் அணியைக் கூப்பிட்டு, ஒரு ‘வெறித்தனமான, மகத்தான கணிப்பொறியை’ உருவாக்கச் சொன்னார். கணிப்பொறி உலகத்தையே கவிழ்க்கப் போகிற ஒரு கணிப்பொறியை உருவாக்குவது அவர் நோக்கம்.

டேவிட் ஆகில்வி, வரலாறு படைத்த விளம்பரங்களைத் தயாரித்தவர். அவரும் புதிய சிந்தனையை பிடித்துக் கொண்டு வந்து யார் கையிலும் கொடுக்கவில்லை. தன் அணியைக் கூப்பிட்டார். ‘அழிவில்லாத சிரஞ்சீவியான படைப்புகள் எவற்றையாவது உருவாக்குங்கள் என்று மட்டுமே சொன்னார்.

புதுமை படைப்பதற்கான வழிகள்:

· மனிதர்களை ஊக்கப்டுத்துவது, சக்தியை வெளியே கொண்டுவருவது, அதிகாரம் கொடுப்பது என்றெல்லாம் பேசுகிறோம். இதற்கு நிறைய நேரமும் சக்தியும் செலவிடுகிறோம். ஆனால் ‘ஊக்கம் கொடுப்பது’ என்பதை வெளியிலிருந்து செய்ய முடியாது. மனிதர்களுக்குள் ஏற்கனவே உறைந்து கிடக்கும் ஆர்வத்தில் நெருப்பு பற்ற வைப்பதே ஒரே வழி.

· அதிகார அமைப்புகள், ஒரு நிறுவனம் நிலைபெற உதவும். ஆனால் அதே அமைப்புகள் நாம் போகும் பாதையையே கூடக்கட்டுப்டுத்தலாம். இந்த அமைப்புகளை மாற்றுவது என்றால் நிறுவனம் ஏன் அந்தத் தொழில்துறையே – இயங்கும் விதத்தை மாற்றவேண்டியிருக்கும்.

· மனிதர்கள் கூட்டமாகச் சேர்ந்து கனவு காணும்போது தொழில்துறைகளே மாற்றம் அடைகின்றன. நீங்கள் உங்கள் அணியுடன் சேர்ந்து கனவு காண்கிறீர்களா, அல்லது உங்கள் தனிப்பட்ட கனவுகளை கீழே இருப்பவர்களிடம் தெரிவித்து அவற்றை நிறைவேற்றச் சொல்கிறீர்களா?

புதுமையாளர்கள் கனவுக் கூட்டங்களை நடத்தி, அணியில் உள்ளவர்களையும் பயணத்தில் முழுவதும் ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். செய்யமுடியாத சாதனைகளைச் செய்யத் தூண்டுதல் தருகிறார்கள்.

புதுமையாளர்கள் புதுமைகளைச் செய்வதில்லை. தாங்கள் செய்வதையே புதுமையாக்குகிறார்கள்.

Monday, September 27, 2010

அவமானம்



அண்மையில் கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது அருமை மகள் காந்தி கண்ணதாசன் ஒரு செய்தி சொன்னார். செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர்.


நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணாடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. “படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்து நடந்திருக்கிறார் கண்ணதாசன்.


அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார். நள்ளிரவு படப்பிடிப்பு. ஆனால் படத்தில் இரவு ஏழு மணி மாதிரி இருக்க கடற்கரை ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்க வைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். வீட்டில் இந்தப் படத்தைப் பார்த்துச் சொல்லியருக்கிறார். “இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்று போலீஸ் நடக்கவிட்டது… இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது” என்றாராம்.


எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவியரசர் தம் வெற்றியை அரங்ககேற்றியிருக்கிறார். அவமானம் ஒரு மூலதனம்.

கவியரசு அவர்களின் மெய்சிலிர்க்கும் பாடல் வரிகளில் ஒரு சில…

“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!!”

“போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்

தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்

ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்

எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்”

Sunday, September 26, 2010

வெற்றி


“நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு”. இரண்டும் ஒன்றாகி விட முடியுமா? நீங்கள் எத்தனைபேரை வேண்டுமானாலும் சுலபமாக முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை.


இதற்கு சொல்வேந்தர். சுகிசிவம் கூறும் உதாரணம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண் தனது முப்பத்துஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள். “அப்பா.. ஒரு குட்டிக் குரங்கு… தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு… அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு… காட்டாத்து வெள்ளம்… திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது… அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது.. பயங்கர வெள்ளம் கீழே… அது எப்படித் தப்பிக்கும் சொல்லுங்கள்?” என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.


அரைமணி நேரம் மாறி மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். “அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும் … தெரியலை, நீயே சொல்லு” என்றார் மகளிடம். “ஆம்… இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை… அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?” என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள்.

அந்தச் சின்னப் பெண். அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை; ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம் தான் எங்கும் நடக்கிறது.


பிறரை வாய் மூடச் செய்வது, செயலிழக்கச் செய்வது, தோற்றுப் போகச் செய்வது, ஆளவிடாமல் தடுப்பது, முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது… இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறோம். இந்தத் தவறுதலான எண்ணத்திலிருந்து தயவு செய்து வெளியே வரவேண்டும். பிறரைத் தோற்கடிப்பது லட்சியமல்ல… நமது வெற்றியே நமது குறிக்கோள் என்கிற தெளிவு இருக்க வேண்டும்.


நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஒரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.

“நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு, பிறரைத் தோற்கடிப்பதே வெற்றி என்று தவறுதலாக அர்த்தம் கொள்ள வேண்டாம்”.


Saturday, September 25, 2010

தோல்வியே வெற்றியின் படிக்கட்டுகள்


ஸ்காட்லாந்து மன்னர் புரூஸ் தனது அரண்மனையில் உட்கார்ந்திருந்தார். நாட்டை இழந்தசோகம் அவர் முகத்தில் வலை பின்னியிருந்தது. ஏன்…? தோல்வி… தோல்வி… எல்லாப் போரிலும் அவருக்குத் தோல்விக்கு மேல் தோல்வி? மேலும் மேலும் முயன்று தோல்வி என்பதால் போர் முயற்சியைக் கைவிடலாமா என்று கவலையுடன் யோசித்தார். கன்னத்தில் கை வைத்த படியே மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருந்த மன்னருக்கு அங்கே ஒரு ஆச்சரியமான காட்சி காத்திருந்தது.

வீட்டு மேல் கூரையில் ஒரு சிலந்தி தனது எச்சிலை நூலாக்கி வலை பின்னிக் கொண்டிருந்தது. மிகமிக மெல்லிய நூல் இழை. அதில் தொங்கிக் கொண்டே தன் கால்களை அப்படியும் இப்படியும் அசைத்து அசைத்துத் தனது குடியிருப்பை… வலைப்பின்னலை உருவாக்கிக் கொண்டிருந்தது. சிலந்தி வலை அறுந்து அறுந்து போனாலும் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல், ஓய்ந்து விடாமல் பாய்ந்து பாய்ந்து வலை பின்னியது சிலந்தி. தோல்வி அந்தச் சிலந்தியைப் பாதிக்கவே இல்லை.

மன்னருக்குப் பொறி தட்டியது. இத்தனை தோல்விக்குப் பிறகும் தளராமல் சிலந்தி செயல்படும் போது, காரிய சாதனை செய்யும் போது நாம் இப்படித் தளர்ந்து போகலாமா என்று தன் உணர்வு பெற்றார். சிலந்தியின் முயற்சி அவரைச் சிந்திக்க வைத்தது! நாட்டை மீட்டு மீண்டும் அரியணை நாற்காலியில் ஏற வைத்தது! முடியாது என்று சிலந்தி கூட ஒதுங்குவது இல்லை. முதுகெலும்புடைய மனிதன் நாம் ஒதுங்கலாமா? நம்மால் முடியும்? முதலில் தோல்விகளையே சந்திக்க கூடும். பிறகு சிலந்தியை போல நாமும் நம் வாழ்வில் வெற்றி பெற முடியும்.

இந்த முயற்சியனை திருவள்ளுவர் இவ்வாறு அழகாக கூறுகிறார்:

அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

குறள் விளக்கம்: நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

இன்றைய பெண்


சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் இன்றைய பெண்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். இவர் கூறுவது பெண்களை இழிவுபடுத்துவதற்காகவோ அல்லது குறை கூறுவதற்காகவோ கிடையாது. பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே!!! எந்த ஒரு பெண்ணும், பெண்களை இழிவுபடுத்துகிறார்கள் அல்லது தாழ்வுபடுத்துகிறார்கள் என்று தவறாக கருத வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாரப் பத்திரிக்கை, மாதப் பத்திரிக்கை படிக்கிற பெண்கள் அதிகம். ஆனால் தினப்பத்திரிக்கை படிக்கிற பெண்கள் எத்தனை பேர்? நாட்டு நடப்பு பற்றி எத்தனை பெண்கள் அக்கறை காட்டுகிறார்கள்? மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்.

தொலைக்காட்சிப் பெட்டியில் சினிமா பார்க்கும் போது குடும்பமே பார்க்கிறது. ஆனால் செய்திகள் தொடங்கியதும் பெண்கள் அடுப்படிக்குள் பாய்ந்து உணவை தயார் செய்வது ஏன்? செய்தி நேரம் வந்ததும் சினிமாவில் இடைவெளி மாதிரி அதை சாப்பாட்டுக்குப் பயன்படுத்த பல பெண்கள் விரும்புவது உண்மைதானே! இது சரிதானா? செய்தி நேரம் என்ன சினிமா இடைவெளியா? இப்படி இருந்தால் பெண்ணின் பொது அறிவு எப்படியிருக்கும்?

பெண்களின் அழகுணர்ச்சிக்கான விலை இன்று மிகமிக அதிகம். காலக் கொலையோ அதைவிட அதிகம். எப்படி? நகங்களை வண்ணப்படுத்தி, பழைய வண்ணங்களை நீக்கப் புது வண்ணம் பூச நெயில் பாலிஷ் ரிமூவர், உதடுகளை உயரிப்பேற்ற உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்), கன்னங்களில் கவர்ச்சி கூட்ட ரூஜ், கண்ணிமைகளை பெரிதுபடுத்தி அழகைக் கூட்ட மஸ்காரா, அழகாய்க் காட்ட ஐ லைனர், கழுத்தை, முகத்தைக் கழுவிக் காட்ட கிளன்சிங் மில்க், மாஸ்க் பிளீச், தோலின் இயற்கை மணத்தை வாசனையில் புதைக்க பாடி ஸ்ப்ரே மற்றும் சென்ட் வகைகள். கொண்டை தொடங்கி கெண்டைக்கால் வரை ‘மாட்சிங்’ பார்த்து அலங்கரிக்கத் தேவையான விதவிதமான உபகரணங்கள். பொருட்ச்செலவும், நேரச் செலவும் இவ்வளவு தேவையா? யோசியுங்கள். அறிவார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். அதற்காக மம்தா பானர்ஜியாகவும், மாயாவதியாகவும் மாறச் சொல்லவில்லை. கொஞ்சம் சிக்கனம்… தேவை இக்கனம்!!!

இந்த பெண்மையின் நிலை நமது இந்தியப் பெண்ளுக்கு மட்டுமல்ல. எல்லா நாடுகளிலும் இந்த வியாதி இருக்கிறது. உதாரணமாக, அமெரிக்காவில் பல விஞ்ஞானிகள் பங்கேற்ற விருந்து ஒன்றினுக்கு உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போயிருந்தார். அவர் மனைவி அவருடன் போக வேண்டியவர். போக முடியவில்லை. கடைசி நேரத்தில் உடம்பு சரியில்லை.

விருந்து முடிந்து வீட்டுக்குத் திரும்பிய ஐன்ஸ்டீனிடம் அவர் மனைவி கேட்டார்…. விருந்து எப்படி நடந்தது? “நன்றாக இருந்தது?” என்று சுருக்கமாக கூறிவிட்டு அங்கு தாம் சந்தித்த விஞ்ஞானிகள் பற்றியும், அவர்களுடன் விவாதித்த அறிவு பூர்வமான விஷயங்கள் பற்றியும் ஆவலுடன் ஐன்ஸ்டீன் சொல்லத் தொடங்கினார். அவர் மனைவிக்குப் பிடிக்க வில்லை.

ஐன்ஸ்டீன் மனைவி சற்றே கோபமாக, “நான் இந்த அறுவையைக் கேட்க்கவில்லை. அங்கு விருந்துக்கு வந்திருந்த பெண்கள் எந்த மாதிரி கவுன் அணிந்திருந்தார்கள் கவனித்தீர்களா?” என்று சீறினார். ஐன்ஸ்டீன் பொறுமையாக, “இதோ பார்… விருந்து மேஜைக்கு மேலே பெண்களின் முகம் மட்டும் தான் தெரிந்தது. அதனால் அவர்கள் அணிந்து வந்த ஆடை எப்படிப்பட்ட ஆடை என்று எனக்குத் தெரியாது. உனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் நான் மேஜைக்கு கீழே குனிந்து பார்த்திருக்க வேண்டும். அது அவ்வளவு கவுரமாக இருந்திருக்காது” என்றார்.

பெண்கள் வாழ்விற்கு எது தேவை என்பதை முழுமையாக புரிந்து கொண்டால் அவர்களது வாழ்க்கை வளமானதாகவும் இனிமையானதாகவும் அமையும்!!!


Friday, September 24, 2010

அடிமையாக்க ஆசைப்படாதே



ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி. அவர் தலைமையில் அமெரிக்காவில் போர் நடந்து கொண்டிருந்த சமயம். பத்துப் பதினைந்து போர் வீரர்கள் ஓர் உத்திரத்தைப் படாத பாடுபட்டு நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குழுவின் தலைவன் குதிரையில் அமர்ந்தபடி அவர்களை அதட்டி உருட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தான். அவர்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு அந்த உத்திரத்தை நகர்த்த முடியாதபடி அதிகச் சிரமப்பட்டார்கள். வேகமாக அதட்டினான் அந்தக் குழுவின் தலைவன்.


அப்போது அங்கு குதிரையில் வந்த வீரன் ஒருவன் தலைவனைப் பார்த்து, “அவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே… நீயும் அவர்களோடு சோர்ந்து அதை நகர்த்தக் கூடாதா?” என்று கேட்டான். குழுத்தலைவன், “நான் யார் தெரியுமா? அவர்களின் தலைவன்… அவர்களோடு சமமாக வேலை செய்ய முடியுமா?” என்று உறுமினான்.

குதிரையில் வந்தவன் இறங்கி, வீரர்களுக்கு உதவி, உத்தரத்தை நகர்த்தி அதன் இடத்தில் வைத்து விட்டுப் பிறகு தனது குதிரையில் ஏறி அமர்ந்தான். அந்தக் குழுவின் தலைவனைப் பார்த்து, “இனி இப்படிக் கடினமாக வேலை ஏதாவது இருந்தால் எனக்குச் சொல்லி அனுப்புங்கள். அவசியம் நான் வந்து உதவுகிறேன்” என்று உரக்கச் சொன்னான்.

நீ யார்? உனக்கு எப்படிச் சொல்லி அனுப்புவது? உன் இருப்பிடம் எது? என்று அலட்சியமாகக் குழுத்தலைவன் கேட்டான். “நானா… ஜார்ஜ் வாஷிங்டன். உங்களின் தலைமைத் தளபதி” என்று அழுத்தமாகக் கூறி விட்டுக் குதிரையைத் தூண்டிச் சிட்டாய் பறந்தார் ஜார்ஜ் வாஷிங்டன்.

தனியாய் இரு!
தலைவனாய் இரு!!
அடிமையாகாதே! அடிமையாக்காதே!!

Wednesday, September 22, 2010

அசாதாரண மனிதர்கள்




இன்றைய சராசரி சாதாரண மனிதர்களே, பிற்காலத்தில் அசாதாரண மனிதர்கள் ஆகின்றனர். பிறவியிலேயே யாரும் அசாதாரண மனிதர்கள் அல்லர். இதற்கு உதாரணமாக பலரைக் கூறலாம்.

ஜெர்மானியராகப் பிறந்தவர் விஞ்ஞானமேதை ஐன்ஸ்டீன். நாஜிகலால் நாடு கடத்தப்பட்டவர். அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தவர். அமெரிக்காவில் பிரின்ஸ்டன் நகரில் உள்ள ஆராய்ச்சி சாலை அவருக்காக ஒதுக்கப்பட்டது. முதல் முறையாக அந்த ஆராய்ச்சி சாலைக்கு அவரை அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி அவருக்கு திருப்த்திதானா? ஏதும் வசதிக் குறைவுகள் உள்ளனவா என்று அமெரிக்க விஞ்ஞானிகள் விசாரித்தனர்.

தயங்கித் தயங்கி மெதுவான குரலில் ஐன்ஸ்டீன் சொன்னார். “இங்கு எல்லாம் வசதியாகவே இருக்கிறது. ஒரே ஒரு குறை” என்று இழுத்தார். “என்ன என்று சொல்லுங்கள் உடனே சரி செய்யப்படும்” என்றனர். அமெரிக்க விஞ்ஞானிகள் அறை ஓரத்தில் இருந்த குப்பைக் கூடையைச் சுட்டிக்காட்டி, “இது ரொம்பவும் சிறியதாக இருக்கிறதே, கொஞ்சம் பெரிய குப்பைத்கூடை இருந்தால் நல்லது” என்றார். திகைத்துப் போய் “பெரிய குப்பைக்கூடையா? எதற்கு?” என்றார்கள்.

ஐன்ஸ்டீன் சொன்னார், “நான் என்ன மேதாவியா, எல்லா ஆராய்ச்சிகளையும் முதலிலேயே சரியாகச் செய்ய… தப்புத் தப்பாகச் செய்வேன். எழுதி எழுதிப் பார்த்தால் எல்லாம் தப்புத் தப்பாக இருக்கும். உடனே கிழித்து எறிந்து விட்டு மீண்டும் மீண்டும் எழுதுவேன். இந்த முட்டாளுக்கு ஒரு விஷயத்தை சரியாகச் செய்ய நிறைய சந்தர்ப்பம் வேண்டும். தவறுகளைப் புதைக்க கொஞ்சம் பெரிய குப்பைக் கூடையும் வேண்டும்” என்றார். அவரே அப்படி என்றால்… நாமெல்லாம் எப்படி?

சாதாரண மனிதர்களில் இருந்துதான் அசாதாரணர்கள் தோன்றுகிறார்கள். நாம் சாதாரணம் என்று சாதாரணமாகி விடவேண்டாம். நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள். சின்னச் சினனத் தோல்விகள். சின்னச் சின்னச் சறுக்கல்கள்… வீழ்ச்சிகள் ஒரு பெரிய விஷயமே அல்ல. எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்.

இந்த ஆழ்ந்த நம்பிக்கையால் தான் உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ள அனைவரும் சாதாரண மனிதர்களாக இருந்து அசாதாரண மனிதர்களாக மாறியுள்ளனர்.

நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!!

Tuesday, September 21, 2010

இல்லற இன்பம்


ஒரு முறை கபீர்தாசரிடம் அவருடைய பக்தர் அறிவுரை கேட்க வந்திருந்தார். அவர் தயங்கித் தயங்கி கபீர்தாசரிடம், “எனக்கு இல்லற வாழ்க்கை இன்பமாக இல்லை! என்னுடைய மனைவியும் நானும் இன்பமாக குடும்பம் நடத்தவில்லை! எப்பொழுதும் சண்டைதான்! நான் என்ன சொன்னாலும் அவள் கேட்பதில்லை! எதிர்த்துப் பேசறா… எரிஞ்சு விழறா… கோபப்படறா… எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றார்”.


கபீர்தாசர் பார்த்தார். “சரி இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்கள்?”, யோசனை செய்து பதில் சொல்கிறேன்! என்று சொல்லிவிட்டு, ஒரு பெரிய நூல் கண்டை எடுத்துக் கொண்டுவந்து வீட்டிற்கு வெளியே வெளிச்சத்தில் உட்கார்ந்தார். அந்த பெரிய நூல்கண்டு சிக்கலாயிருந்தது. அதனால் கபீர்தாசர் அதில் உள்ள சிக்கல்களை ஒவ்வொன்றாக பிரித்தெடுத்தார். நல்ல வெளிச்சமாகத்தான் இருந்தது. மனைவியிடம் விளக்கை எடுத்துக் கொண்டுவா என்றார். அந்த அம்மாவும் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டுவந்து அவர் பக்கத்திலே வைத்துவிட்டு உள்ளே போய்விட்டார்கள். “இவ்வளவு வெளிச்சத்தில் விளக்கு எதற்கு என்று எதுவும் கேட்கவில்லை”

.

சிறிது நேரம் கழித்து அந்த அம்மா இரண்டு டம்ளர் பாலைக் கொண்டுவந்து அவர்கள் முன்னால் வைத்தார்கள். இரண்டு பேரும் அதை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்கள். வந்திருந்தவரின் முகம் சுருங்க ஆரம்பித்தது… பாலை அவரால் குடிக்க முடியவில்லை. ஏனெனில், அந்த அம்மா பாலில் சர்க்கரைக்குப் பதிலாக, உப்பைப் போட்டு இருந்தார்கள். வந்தவர், கபீர்தாசர் முகத்தைக் கவனித்தார். அவர் முகத்திலே எந்த வித்தியாசமும் இல்லை. அவர் அதை அப்படியே குடித்துவிட்டார். அந்த அம்மா, “பாலுக்குச் சர்க்கரை போதுமா?” என்று கேட்க்கிறார்கள்! அதற்கு கபீர்தாசர், “போதும்! இனிப்பு சரியாக இருக்கிறது!” என்கிறார்.


இதையெல்லாம் பார்த்துக் கொண்டு எதிரில் இருந்தவர், “இன்னும் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லவில்லையே!” என்று கபீர்தாசரைப் பார்த்து விளவினார். அதற்கு கபீர்தாசர்,“நான் இப்பொழுது என் மனைவிக்கு என்ன பதில் சொன்னனோ அதுதான் உங்கள் கேள்விக்கும் பதில் என்றார்”. யஜீர் வேதம் என்ன சொல்கிறது தெரியுமா? “எந்தக் குடும்பத்திலே கணவனும் மனைவியும் ஒருத்தர் குற்றத்தை இன்னொருத்தர் பார்க்காமல் இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் பூலோக கைலாசம்” என்றார்.


இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கபீர் வெளிச்சத்தில் உட்கார்ந்து கொண்டு விளக்கை கேட்டபோது, அவர் மனைவி ஏதும் கேட்க்காமல் விளக்கைக் கொண்டு வந்து வைத்தார். கபீரின் மனைவி பாலில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பைப் போட்டிருந்த போதும், கபீர் ஏதும் கூறாமல் அதைக் குடித்தார். இதுவே இல்லற இன்பம்.


கபிலர்… நானும் என் மனைவியும் குடும்பத்திலே ஒருவரை ஒருவர் ரொம்ப “விட்டுக் கொடுத்து” நடந்து கொள்வோம். அதனால் எங்களுக்குள் மனஸ்தாபம் வருவதே இல்லை.

“இதுவே இல்லற இன்பம்”