நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர்.
Thursday, March 3, 2011
கண்ணியமான தேர்தலுக்குக் களப்பணியாற்றுவோம்!-தினமணி கட்டுரை
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் மூலம், ஊழல் ராஜாக்களும், ராணிகளும் பெற்ற ஆதாயங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்காக அரசு வழங்கும் மானியங்களையும் முடிச்சுப் போட்டுப் பேசுகிறார் பிரதமர் மன்மோகன்சிங்.
கூட்டணிக்கட்சி அமைச்சரும் கூட்டாளிகளும் வரலாறு காணாத முறைகேடுகளில் ஈடுபட்டாலும், தடுக்க முடியாததற்குக் காரணம் கூட்டணி தர்மம் என்று கூறி திருதராஷ்டிரர் அவதாரம் எடுக்கிறார் அவர். மிக மோசமான நிதி நிர்வாகத்தாலும், அதிக சம்பளச்சுமையாலும், வரலாறு காணாத இலவசப் போலிக்கவர்ச்சி ஜிகினா திட்டங்களாலும், கரைபுரண்டு ஓடும் ஊழல்களாலும், சாராய வருமானத்தையும் மீறி தமிழக அரசின் கஜானா காலியாகிவிட்ட நிலையில், எல்லா வகை புதிய திட்டங்களுக்காகவும் வெளிநாட்டு வங்கிகள், உலக வங்கி ஆகியவற்றிடம் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
நிதியமைச்சர் அன்பழகனோ, அரசின் தவறுகளை மறைத்துவிட்டு, ""தமிழகம் கடன்களால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது'' என்று ஒரு புரட்டான பொருளாதாரப் பாடம் எடுக்கிறார். தமிழக முதல்வரோ, ""ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும்'' என்றுகூறி, தமிழக ஆண்மகனின் ஆடையை உருவிவிட்டு, கோமணத்தைக்கட்டி, கையில் ஒரு திருவோட்டையும் கொடுத்துக் கேவலப்படுத்துகிறார்.
தடித்த தோலுடனும், நரம்பில்லா நாக்குடனும் வளைய வரும் நம் இன்றைய தலைவர்கள், பொது வாழ்வில் ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்துவதற்கும், மக்களை முட்டாள்களாகக் கருதி மமதையுடன் நடந்து கொள்வதற்கும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் சொத்து சேர்த்துக் கொள்வதற்கும் எப்படி முடிகிறது?
இவையெல்லாம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனக் கூறப்படும் இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தை, கட்சியை, நாட்டின் வளங்களைத் தங்களது குடும்ப உறுப்பினர்களின் பிடியில் வெளிப்படையாகவே தொடர்ந்து வைத்துக் கொள்ளும் துணிவு, இந்த மக்களாட்சியில் இவர்களுக்கு எப்படிச் சாத்தியப்படுகிறது? வாரிசுகளால், வாரிசுகளுக்காக, வாரிசுகளைக் கொண்டு நடத்தப்படும் ஆட்சிமுறையை ஓட்டு அரசியல் மூலம் இன்றைக்கு எப்படி இவர்களால் சாதிக்க முடிகிறது? சிறிதும் கூச்சமின்றி, மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்சென்று கொண்டே, ஓட்டுகளையும் எப்படிப் பெற முடிகிறது?
இவற்றுக்கெல்லாம் காரணம் பெரும்பாலான இந்திய மக்களிடம் ஜனநாயகம் பற்றிய உண்மையான, ஆழமான புரிதலை ஏற்படுத்தவே இல்லை என்பதுதான். நீண்டகாலமாக மன்னர்களின் கீழும், ஜமீன்களின் கீழும், உயர்ஜாதிகளின் கீழும், பின்னர் வெள்ளையர்களின் கீழும், அடிபணிந்து வாழப்பழகியவர்கள் நம் மக்கள். அரசியல் விடுதலை கிடைத்துவிட்டாலும், பிரதிநிதித்துவ அரசியல் தத்துவத்தை அவர்கள் உள்வாங்கிக் கொள்ளவே இல்லை.
ஆதலால், அதிகாரம் என்பது மீண்டும் ஆதிக்க சக்திகளிடமே சிறைப்படுவதும், அதிகாரத்துக்கு வருபவர்கள் ஆதிக்க சக்திகளாக மாறுவதுமேதான் நடைமுறையானது. பண்டைய கிரேக்க அறிஞர் சாக்ரடீஸின் சீடரான ப்ளேட்டோ, ""மக்களாட்சி சீருடன் நடைபெற, அதற்கு முயற்சியும், தன்னொழுக்கமும், ஜனநாயகம் பற்றிய பல்வேறு நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ளும் விருப்பமும் மக்களுக்குத் தேவை. இதற்குப் பெரும்பாலான மக்கள் தயாராக இல்லாதபோது, அங்கு ஜனநாயகம் வீழ்ச்சி அடையும்'' என்கிறார்.
தமிழக அரசால் தொடர்ந்து மிகமோசமாக நிர்வகிக்கப்படும் ஆதிதிராவிடப் பள்ளிகளில் படிக்கும் சராசரி மாணவர், தரமான கல்வி கிடைக்காமல், பாடங்கள் பற்றிய குறைந்த அளவு புரிதல்கூட இல்லாமலேயே, தேர்வில் மட்டும் எப்படித் தேர்ச்சிபெற்று விடுகிறாரோ, அந்த அளவுக்குத்தான் வாக்குச்சாவடியை மக்கள் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால்தான், ஜாதியையும், நோட்டையும், பிரியாணியையும், சாராயத்தையும் பயன்படுத்தி மோசமான அரசியல்வாதிகளால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது. தேர்தல் அரசியலை, கிரிக்கெட் சூதாட்டம் போன்று மாற்ற முடிகிறது. அதிலும், தமிழக அரசியல், இன்று உலக அரங்கில் மிகுந்த கேலிக்கு ஆளாகியுள்ளது. பிகாரில்கூட, சிறப்பான முறையில் தேர்தலை நடத்திவிட்டோம்.
ஆனால், ஏப்ரலில் நடைபெறவிருக்கும் தமிழகத் தேர்தலை நினைத்தால்தான் கதி கலங்குகிறது, இதுதான் தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய கவலையாக இருக்கும் என்றால் மிகையில்லை. ஏற்கெனவே திருமங்கலம் ஃபார்முலா, பென்னாகரம் ஃபார்முலா என்று புதிய இலக்கணங்கள் வகுத்துள்ள தமிழக அரசியல்வாதிகள், இன்னும் என்னவெல்லாம் அஸ்திரங்களை ஏவி, தேர்தல் ஆணையத்தை திக்குமுக்காடச் செய்து, ஓட்டுகளை களவாடி, ஓட்டுகளைப் பொறுக்கி, ஓட்டுகளைப் பிரித்து, அதிகார நாற்காலியைப் பிடித்துக் கொள்வார்களோ என்ற கிலி ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல், மே மாத வெக்கையை அதிகரிக்கும் விதத்தில் ஏசியும் பேசியும், கோடிக்கணக்கான கள்ளப்பணத்தைத் திருட்டுத்தனமாக விநியோகித்தும், ஆயிரக்கணக்கான கிடாய்களைப் பலி கொடுத்து, பிரியாணி விருந்து கொடுத்தும், சாராயத்தை ஆறாக ஓடவிட்டும், பத்தடிக்கு ஒன்று வீதம் ஆபத்தான பிவிசி ஃபிளக்ஸ் விளம்பரப்பதாகைகளால் கண்களைத் துன்புறுத்தி, டையாக்சின் நச்சுக்காற்றைப் பரப்பியும், தேர்தலைப் போர்க்களமாக மாற்றி விடுவார்கள் என்று அஞ்சத் தோன்றுகிறது. பின்தங்கிய மாநிலம் எனப்படும் பிகாரில் தேர்தல் ஆரோக்கியமாக நடந்ததெப்படி?
ஏனென்றால், அங்கு நிதீஷ்குமார் எனும் தொலைநோக்குப்பார்வையுள்ள தலைவர் தோன்றி, மக்களைக் கண்ணியமான ஜனநாயகத்துக்குத் தயார் செய்தார். மக்களுக்கு ஆசானாக, முன்னுதாரணமாக இருக்கிறார். கவர்ச்சி ஜிகினா ஃபார்முலாக்கள் மூலம் மக்களை ஏமாற்ற முயலவில்லை. ஆடம்பர அரசியல், அடாவடி அரசியல், ஜாதி அரசியல், வாக்கு வங்கி அரசியல் ஆகியவற்றைக் கடந்து செல்ல முயன்றார். நாளையும் அவர் வெற்றி பெறுவார் என்று கூற முடியாது, தோற்றுவிடலாம். ஆனாலும், அவரது அணுகுமுறை மிகுந்த பாராட்டுக்கு உரியது, மற்ற அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டியது. ஆனால், தமிழகத்தில் இருப்பவர்களோ, தலைவர்கள் அல்ல, தரகர்கள். ஜனநாயகத்தின் ஒவ்வொரு கூறுகளுக்கும் ஒரு விலை வைத்து, அதைப் பணநாயகமாக மாற்றி விட்டவர்கள். தாங்களும் சாக்கடையில் குளித்து, மக்களையும் புதைகுழியில் தள்ளத்தயாராகி விட்டவர்கள்.
தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதாக மாய்மாலம் காட்டுபவர்கள். தமிழ்ச் சமூகத்தில் இன்று ஏற்பட்டிருப்பவை வளர்ச்சித்தசைகள் அல்ல, புற்றுநோய்க் கட்டிகள். இதன் விளைவாக தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், மன நலம், பொது அமைதி, தனிநபர் ஒழுக்கம், மண்ணின் விழுமியக் கூறுகள் என்று எல்லாமுமே நசிந்து வருகின்றன. ""பெரும் பணக்காரர்களோ, ஆயுத பலம் கொண்டவர்களோ, நியாயமாக ஒரு சமுதாயத்தை வழி நடத்த முடியாது. ஒரு சமுதாயத்தின் மிகச்சிறந்த மனங்களை அந்தச் சமுதாயத்தை வழிநடத்த வேண்டும்'' என்கிறார் ப்ளேட்டோ.
ஆனால், இன்றைக்குத் தமிழகத்தில் நடப்பதென்ன? கூலிப்படைத்தலைவர்களும், பெரு நிறுவன முதலாளிகளும் நேரடித் தேர்தல் அரசியலில் இறங்கி விட்டார்கள். மீன் இறந்தவுடன் தலையில் இருந்து அழுகத் தொடங்கும். பின்னர், அதன் உடலும் அழுகும். அதுபோன்று தமிழக அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் அழுகிவிட்டதனால், அது தமிழ்ச் சமுதாயத்தின் பின்னடைவுக்கும் காரணமாகி வருகிறது. ஆதலால், பணபலம், ஆள்பலம், இன்னபிற அவலங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, வருகிற தேர்தல் ஓரளவு கண்ணியமாக நடைபெற்றால்தான் தமிழகத்தின் எதிர்காலம் சீரமைக்கப்படுவதற்கும், அதன் தாக்கம் தேசிய அளவில் பிரதிபலிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு வேண்டிய உண்மையான முயற்சிகளை எடுக்கத் தேர்தல் ஆணையம் முனைப்புக் காட்டுகிறது. தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளுக்கு உரம் சேர்க்கும் வகையில், சமூக ஆர்வலர்கள், பெண்களுக்கான அமைப்புகள், சிறு சிறு தன்னார்வ இயக்கங்கள், ஓய்வுபெற்ற நேர்மையான சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகிய பலர் இணைந்து கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, அரங்கக் கூட்டங்கள் நடத்தத் தொடங்கியுள்ளனர்.
தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, நடுநிலையாளர்கள், இளைஞர்கள் ஆகியோரை ஒன்றிணைத்துச் செயல்பட்டால், தேர்தலின் கண்ணியத்துக்கு இவ்வமைப்பால் உதவ இயலும். நுகர்வுக்குள் சிக்கிக்கொண்டு ஓட்டுப்போட மறுக்கும் மேல்தட்டு மக்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
ஊழல், விலைவாசி, ஏமாற்றுத் திட்டங்கள், வன்முறை ஆகியவற்றால் விரக்தி அடைந்து தேர்தலைப் புறக்கணிக்க நினைப்பவர்களிடம் வாக்குகள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நம்பிக்கை அளிக்க வேண்டியுள்ளது. வாக்குகள் விற்பனைக்கல்ல, தன்மானம் இழப்பதற்கல்ல, ஊழல், மக்களின் உயிரைக் குடிக்க வல்லது. லஞ்சம், அடுத்த தலைமுறையை அழித்து வருகிறது போன்ற கோஷங்களை உரக்கப் பேச வேண்டியுள்ளது. மிக முக்கியமாக, பரபரப்பான செய்திகளையும் மசாலாத்தனமான கதைகளையும் தாண்டி, மக்களிடமும், பொதுவில் இருப்பவர்களிடமும், தேர்தலைக் கண்ணியமாக நடத்துவதற்கான பரப்புரை செய்வது மட்டுமல்லாமல், மக்களின் மனசாட்சியாக நடந்து கொள்ளும் கடமையும் இன்று ஊடகங்களுக்கு உள்ளது. நியாயத்தின் பக்கம் இருக்கும் ஊடகங்களும், சிறு பத்திரிகைகளும், சமூக அக்கறை உள்ள நிருபர்களும் தங்கள் பங்கைத் திறம்பட ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை இருக்கிறது.
தமிழகத்தின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் ஆகியோர் மக்களுக்கு அதிகபட்ச நன்மை செய்வதற்கே தங்களது பதவி என்று உணர்ந்து, நேர்மையாகச் செயல்பட வேண்டிய கடமை காத்துக்கொண்டிருக்கிறது. ஆக மொத்தம், அடுத்த 42 நாள்களுக்கு தமிழ்ச் சமுதாயத்தின் மீது உண்மையான பற்றுக் கொண்டவர்கள் எல்லோரும், பணநாயகத்துக்கு எதிராகவும், தசைபலத்துக்கு எதிராகவும் அணி திரள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. திருமங்கலம் ஃபார்முலாவையும், பென்னாகரம் ஃபார்முலாவையும் தமிழகம் முழுவதற்குமான ஃபார்முலாவாக மாற்றும் முயற்சி நடந்தால், அதனை முறியடிக்க வேண்டியுள்ளது.
இல்லையென்றால் தமிழகம், அழிவு ஃபார்முலா எனும் ஒரு வழிப்பாதைக்குள் சிக்கிக் கொள்ளும் அபாயம் காத்திருக்கிறது. கண்ணியமான தேர்தலுக்கான அவசியம் பற்றி ஓயாமல் பேசுவதும், எழுதுவதும் செயல்படுவதும் நமது கடமை, பணி, சமூக சேவை என்று தவறாக நினைக்க வேண்டாம். அதுதான் நமது எதிர்காலத் தலையெழுத்தையே இனிமேல் தீர்மானிக்க இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். இன்றைய இந்திய ஜனநாயகம் ஊழல்வாதிகளிடமும், கிரிமினல் மாஃபியாக்களிடமும், பேராசை பிடித்த வாரிசுகளிடம் சிக்கிக்கொண்டு, ஆன்மாவற்ற, ஆண்மையற்ற மக்களாட்சியாக மாறிவிட்டது.
இந்த ஜனநாயகத்தை மீட்டு அர்த்தமுள்ளதாக்கும்வரை தூக்கத்தையே தொலைத்துவிட்டு தளராமல் வீரியத்துடன் செயல்பட வேண்டிய கடமை நம்மில் பலருக்கு உள்ளது. தமிழ்ச் சமூகத்தின் பால் அக்கறை கொண்டவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் எல்லோரும் கண்ணியமான தமிழகத் தேர்தலை வலியுறுத்தி களப்பணியாற்றுவோம்!
நன்றி :தினமணி
Sunday, February 13, 2011
தனிமனித ஒழுக்கம்
மக்கள் தொகையில் உலகின்இரண்டாவது இடத்தில் இருக்கும்மிகப்பெரிய ஜன நாயக நாடானஇந்தியாவில் இன்று பெரும் சாபக்கேடாக இருப்பது ஊழல் .முந்த்ரா ஊழலில் இருந்து இன்றைய இரண்டாம்தலைமுறை அலைகற்றை ஒதுக்கீட்டுஊழல் வரை நடந்த ஊழல்களில்இதுவரை ஊழல்வாதிகள் தண்டனைபெற்றதாக சரித்திரம் இல்லை.அரசியல் என்றாலே சம்பாதிப்பதற்கான தளம் என்ற தவறான எண்ணம் இன்றைய தலைமுறையிடம் விதைக்கப்பட்டு இருக்கிறது.தொன்மையான பாரத கலாச்சாரத்தின் அரசியல் களத்தின் 1947 சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்ட அரசியல் அமைப்பில் ஏற்பட்ட கோளாரே இதற்க்கு காரணம் என்றால் மிகை அல்ல . இந்த மனநிலை மாற்றம் சமூகத்தில் எப்போது ஏற்பட்டு இருக்க வேண்டும் என்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும் .1967 தமிழ் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதிகாரத்திற்கு வந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் முதல் அமைச்சரான கலைஞர் .கருணாநிதி மீது சுமத்தப்பட்ட ஊழல் ஒட்டு மொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது .அன்றைய பாரத பிரதமர் இந்திரா காந்தியால் அமைக்கபட்ட நீதிபதி சர்க்காரியதலைமையிலான கமிட்டி கருணாநிதி விஞ்ஞான முறையில் ஊழல்செய்துள்ளார் என்று அறிக்கையை சமர்பித்தது.ஆனால் நடவடிக்கை இல்லை.
அரசியலில் வாரிசுகளின் அடாவடித்தனம் ரவுடிகளின்அடங்காபிடாரிதனம்,கிரிமினல்களி
ஒரு நாடு நல்ல நாடாக திகழ நல்ல மக்களை பெற்று இருக்க வேண்டும்அந்த நல்ல மக்கள் ஒழுக்க சீலர்களாய் திகழ வேண்டும்.அந்த நல்ல மக்கள்தனிமனித ஒழுக்கத்தில் தலை சிறந்து விளங்க வேண்டும்.அந்தஒழுக்கத்தை நாம் எங்கிருந்து பெறுவது ?என்ற கேள்வி உங்கள் மனதில்எழுவது தெரிகிறது.எந்த பிள்ளையும் நல்ல பிள்ளைதான் இந்த பூமியில்பிறக்கையிலே என்ற கருத்துக்கு யாரும் மறுப்பளிக்க முடியாது.அந்தகுழந்தை நல்ல குழந்தையாக வளர்வதில் தாய்க்கு இருக்கும் பங்கு போல்சமுதாயத்திற்கும் பங்கு உள்ளது .பொய் சொல்ல கூடாது பாப்பா என்றுபாரதியார் பாடலை படித்து வளரும் சிறுவனோ அல்லது சிறுமியோ தான்படிக்கும் வாழ்க்கை பாடத்திற்கு நேர் மாறான சமுதாயத்தை தான் பார்க்கமுடிகிறது.
எனவே தனி மனித ஒழுக்கம் மூலமாக தான் நாம் நல்ல நேர்மையானசமுகத்தை அமைக்க முடியும் .அதற்க்கான முயற்சிகள் பள்ளி பருவத்தில்இருந்து ஆரம்பிக்க படவேண்டும் .ஆனால் அதை போதிக்கும் ஆசிரியர்கள்நேர்மையானவர்களாக இருக்கவேண்டும் .அவர்கள் தனிமனிதஒழுக்கத்தில் தலை சிறந்து விளங்க வேண்டும் .ஆசிரியர்கள் கற்பிக்கும்ஒழுக்கம் ஒழுக்கமற்றவர்களாக இருக்கும் பெற்றோரை மாற்றும் விதமாகஇருக்க வேண்டும் .உதாரணமாக தனது தந்தையுடன் கடைக்கு செல்லும்சிறுமி தனது தந்தை வாழை பழம் சாப்பிட்டு விட்டு தோலை பொது இடத்தில்வீசி எறிய முற்படுகையில் அதை தடுத்து 'அப்பா தோலை குப்பைதொட்டியில் தான் போட வேண்டும் 'என்று அறிவுரை கூறுபவர்களாக மாற்றவேண்டும் .அப்படி ஒரு சிறுமி சொல்வாளானால் அந்த தந்தை நாணி குறுகிவிடுவார்.அப்படிப்பட்ட சிறுவர் சிறுமியரை உருவாக்கும் மிகப்பெரியபொறுப்பு ஆசிரியர் சமுதாயதிற்கு இருக்கிறது .
தனிமனித ஒழுக்கம் நமது பாரத தேசத்தின் மதிப்பை உயர்த்தும் .தேசபற்றுவளரும் .புராதன இந்தியாவின் கலாச்சாரம் தேடி வருவோர் எண்ணிக்கைகூடும் .தேசத்தில் நேர்மையான அரசியல் ,ஊழலற்ற அரசாங்கம்வன்முறை,சாதிகளற்ற,குற்றங்கள் அற்ற சமூகம் அமையும் .நினைத்துபார்க்கும் போதே நெஞ்சம் குளிர்கிறது .....
ஆனால் அதை நிறைவேற்ற போவது யார் ?ஆசியர் சமுதாயமா ?பெற்றோர்சமுதாயமா?அல்லது அரசாங்கமா? என்பதே நமக்குள் எழுகின்ற மில்லியன்டாலர் கேள்வி .... . ,
Subscribe to:
Posts (Atom)